அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி, கொடுமுடி, ஈரோடு மாவட்டம்.
+91- 4204-222 375 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகுடேஸ்வரர் | |
அம்மன் | – | திரிபுர சுந்தரி, மதுரபாஷினி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பாண்டிக்கொடுமுடி | |
ஊர் | – | கொடுமுடி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர். ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக்கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார். காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் இரத்தினமாக மாறி இலிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன இலிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம். இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர். இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னி மரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார். ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம். ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது. பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் “வியாக்ரபாத விநாயகரின்” சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர். இங்கே ஈசன், “மகுடேஸ்வரர், மலைக் கொளுந்தீஸ்வரர்” என்றும், அம்பாள்,”சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி” என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர். அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது. இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத்தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி, ஈரோடு மாவட்டம்.
+91- 4256 – 230 192, +91- 98432 48588 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சங்கமேஸ்வரர் (அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்) | |
அம்மன் | – | வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி | |
தல விருட்சம் | – | இலந்தை | |
தீர்த்தம் | – | காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருநணா, பவானி முக்கூடல் | |
ஊர் | – | பவானி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூலோகத்தில் உள்ள புனித தலங்களைத் தரிசிக்க விரும்பினான். அவன் ஒவ்வொரு தலங்களாக சென்று தரிசித்த பின் இத்தலத்திற்கு வந்தான்.
அங்கு யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தவம் செய்வதையும் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்கள் சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்த குபேரன் மிகுந்த ஆச்சரியமடைந்தான். இந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறைவன் தரிசனம் வேண்டித் தவம் செய்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவனும் திருமாலும் குபேரனுக்கு தரிசனம் தந்தார்கள். அத்துடன் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார்.
அப்போது அசரீரி தோன்றி,”குபேரனே! வேண்டும் வரம் கேள்” என்றது. “இறைவா! உனது பெயரான அளகேசன் என்ற பெயரால் இத்தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்” என வேண்டினான். அன்றிலிருந்து இத்தலம் “தட்சிண அளகை” என்ற பெயர் பெற்றது. திருமாலும் சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.
அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு.
இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு “யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது).” எனவே இத்தலத்திற்கு “திருநணா” என்ற புராணப்பெயரும் உண்டு.