Tag Archives: நங்கவள்ளி

சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி

அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமேஸ்வரர்
அம்மன் சவுந்தரவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நங்கவள்ளி
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் தொட்டிநங்கைஎன்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கிப் பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவக் கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள். அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள் வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது எனக் கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் இலட்சுமிவடிவக் கல்லை கண்டனர். அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்தனர். பெரிய கோயிலாக கட்டப்பட்டது. இந்த கோயில் ரெட்டியார், தேவாங்கர், வன்னியகுல சத்திரியர், நாயக்கர் சமுதாய மக்களுக்கு குலதெய்வ கோயிலாக விளங்குகிறது.