அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி, கண்டியூர் போஸ்ட், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-93451 04187, +91-4362-262 334, 93451 04187, 98429 78302 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
அம்மன் மங்கையர்க்கரசி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வைத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேதிகுடி
ஊர் திருவேதிகுடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களைப் புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடிஎன்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு வேதிஎன்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.

சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனைத் தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியைத் தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான். பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், “உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியேஎன்று பாடியுள்ளார்.

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, கண்டியூர் வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362-262 814, +91-94862 82658,+91-94435 61731, +91-99438 84377, +91-99424 50047 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 – 11 மணி. காலை நேரத்தில் மட்டும் இறைவனை தரிசிக்க முடியும்.

மூலவர் சோற்றுத்துறை நாதர், ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர்
அம்மன் அன்னபூரணி, தொலையாச்செல்வி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி, சூரிய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சோற்றுத்துறை
ஊர் திருச்சோற்றுத்துறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பசியால் துடித்தனர். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், “என்னகொடுமை இது இறைவா? இப்படியா மக்களை பசியில் தவிக்க விடுவாய் . இது நியாயமாஎனச் சண்டை போட்டான். பசியின் கொடுமையால் கோயில் அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார். மாலையில் வந்து விளக்கு மட்டும் வைத்த ஊழியன், இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழே விழுந்துவிட்டான். விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுத்தார். “அருளாளா. இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடுஎன்று அசரீரி கேட்டது. இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். கடவுள் கண்ணத் திறந்துட்டார் என்று ஊர் மகிழ்ந்தது. இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை சப்தஸ்தானத் தலங்களில் மூன்றாவது தலம். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறைஎனும் பெயர் ஏற்பட்டது. இத்தலத்ததை ராமலிங்க வள்ளலாரும், அருணகிரிநாதரும் போற்றியுள்ளனர். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன்ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார்.