Tag Archives: திருக்கோவிலூர்

வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேசுவரர்
உற்சவர் அந்தகாசுர வதமூர்த்தி
அம்மன் பெரியநாயகி, சிவானந்த வல்லி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அந்தகபுரம், திருக்கோவலூர்
ஊர் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர்

பார்வதி ஈசனின் இரு(சூரியன், சந்திரன்) கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து, அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்). அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து இரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி, போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி ரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் இரத்தத்துளிகளை, கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட இரத்தம், இரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில், சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருக்க செய்கிறார். பின்னர், அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார்.

இதையே, இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோச நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.

அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து, பாரி வள்ளலின் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும், திருக்கோயிலூரை ஆண்ட தெய்வீக மன்னனுக்கு திருமணம் செய்து வைத்த சிறப்புடைய தலம் இது. இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.

அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர்

அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர் – 605757, விழுப்புரம் மாவட்டம்.

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவிக்கிரமர்
தாயார் பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம் புன்னைமரம்
தீர்த்தம் பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோவலூர்
ஊர் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து, யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தரவிடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம்தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியைப் பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை வைத்து அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொன்னார். மகாபலி கமண்டலத்தை எடுத்து நீரை ஊற்றித் தானத்தை தாரை வார்க்க முயல, சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தின் மூக்குப்பகுதியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க, விஷ்ணு தர்ப்பைப் புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார். மகாபலி கமண்டலத்தை எடுத்து மூன்றாவது அடியைத் தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.