Tag Archives: நத்தம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் – 624401, திண்டுக்கல் மாவட்டம்.
****************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – இரசம்மாநகரம்

ஊர்: – நத்தம்

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

லிங்கம நாயக்கன் இப்பகுதியை ஆண்டு வந்த போது, அரண்மனைக்குப் பால் கொண்டு வருவபர் தினமும் பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் பால் குடம் காணாமல் போய்க் கொண்டே இருந்தது.

மன்னனுக்குத் தகவல் தெரிந்து, அந்த இடத்தைப் பார்வையிட்டான். அந்த இடத்தில் சிலை ஒன்று மண்ணில் மறைந்திருப்பது கண்டு கடப்பாறை கொண்டு தோண்ட உத்தரவிட்டான்.

தோண்டும் போது அம்மன் தோளில் கடப்பாறை பட்டுவிட்டதால் ரத்தம் பீறிட்டது. அச்சிலையை எடுத்து மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே லிங்கம நாயக்கன் பிரதிட்டை செய்தான். ரத்தம் பீறிட்டு வெளிவந்த அம்மன் இருப்பதால் அவ்வூரின் பெயர் ரத்தம்என்றாகிக் காலப்போக்கில் நத்தம்என்று அழைக்கப்பட்டது.

மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு.

அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோயில், நத்தம்

அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோயில், நத்தம், பஞ்செட்டி, திருவள்ளூர் மாவட்டம்
தல வரலாறு

முன்பொரு சமயம் சிவதரிசனம் செய்ய பிரமன் சென்றார். அப்போது முருகனால் வழிமறிக்கப்படுகிறார். ஓம் எனும் பிரணவத்தின் பொருள் சொல்லுமாறு முருகன் கேட்க விடை தெரியாத பிரமன் முருகனால் சிறைப்படுத்தப் படுகிறார். படைப்புத் தொழில் தடைபடுவது கண்டு நாரதரின் அறிவுறைப்படி பிரம்மன் இங்கு வந்து கணபதியைக் குறித்து தவமியற்றி காரியசித்தி அடைந்ததாகத் தல வரலாறு. பிரம்மன் வழிபட்ட பிள்ளையாரான அருள்மிகு காரியசித்தி கணபதி தொந்தியின்றி முக்கண்ணோடு மேலிரு கரங்களில் ருத்ராட்சமும் கோடரியும் ஏந்தி கீழிரு கரங்களில் மோதகமும் தந்தமும் ஏந்தி தாமரை பீடத்தில் அமர்ந்துள்ளது போல திருவுருவச்சிலை அமைந்துள்ளது.
சிறப்புகள்

திருமணத் தடை உள்ளவர்கள், ஒருகிலோ பச்சரிசி, வெல்லம், அருகம்புல் படைத்து ரோஜா மாலை சாற்றி சிதறு காய் உடைத்து 16 வலம் வந்து அர்ச்சனை செய்து வழிபட திருமணத்தடை அகன்று திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள வாலீசுவரரையும் ஆனந்தவல்லியையும் வழிபட ராகு கேது சர்ப்ப தோடங்கள் அகலும்.

முருகனுக்கு வெண் சங்கு தீபம் ஏற்றி எதிரில் உள்ள திருமாலுக்குத் தயிர்சாதம் படைத்து வழிபட மாமியார் மருமகள் பிரச்சனை விலகும்.

உமையொருபாக கோலத்தில் உள்ள சண்டேசுவரரை வழிபடத் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.

பிரதோச வழிபாடு இங்கு செய்வதால் சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோசவழிபாடு செய்வதைப் போன்று மும்மடங்கு பலன் கிடைக்கும் எனவும் தலபுராணம் கூறுகிறது.
வழிகாட்டி:

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் காரனோடைப்பாலம் அடுத்து பஞ்செட்டி நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 3 கீ.மி தொலைவு சென்றால் நத்தம் கிராமத்தை அடையலாம். சென்னை கோயம்பேட்டிலிருந்து 58சி, 112ஏ, 112பி, 132, 133, 131ஏ, 113, 533 ஆகிய வழித்தடப் பேருந்துகள் பஞ்செட்டிக்கு செல்லுகின்றன.