Tag Archives: திருக்கிளியனூர்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.

+91 – 94427 86709 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகஸ்தீஸ்வரர்(அக்ஞீசரம் உடையவர்)
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் அக்னி, கன்வ தீர்த்தம்
பழமை 1200 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கிளிஞனூர், திருக்கிளியன்னவூர்
ஊர் கிளியனூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞான சம்பந்தர்

இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். கிள்ளி என்பது பழங்காலச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.

சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர்என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர்என்று மருவியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர்என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில், இடைக்காலத்துச் சோழமன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.