Tag Archives: வரகூர்

அருள்மிகு இலட்சுமிநாராயணர் திருக்கோயில், வரகூர்

அருள்மிகு இலட்சுமிநாராயணர் திருக்கோயில், வரகூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4362 280 392, 94879 92680, 94428 52145

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இலட்சுமிநாராயணர்
உற்சவர் வெங்கடேசப்பெருமாள்
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வரகூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

மகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த சேத்ரம் எனப்படும். அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு இலட்சுமி நாராயணராக எழுந்தருளினார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீரப் பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், “நாராயணா. நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா. உன் பிணி தீரும்என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த இலட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், “பக்தா. உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடுஎன்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். “கிருஷ்ண லீலா தரங்கிணிஎன்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராகக் காட்சி தந்ததால் ஊருக்கு வரகூர்என்ற பெயர் ஏற்பட்டது.

மூலஸ்தானத்தில் இலட்சுமி நாராயணர், பத்ம விமானத்தின் கீழ், இடது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி அமர்ந்திருக்கிறார். இவருக்குத் தினமும் திருமஞ்சனம் உண்டு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள உற்சவர் வெங்கடேசப்பெருமாள் பிரசித்தி பெற்றதால், இவரது பெயரால் கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், சாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகின்றனர்.