Tag Archives: திருநந்திக்கரை

நந்தீஸ்வரர் திருக்கோயில், திருநந்திக்கரை

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருநந்திக்கரை, கன்னியாகுமரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நந்தீஸ்வரர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருநந்திக்கரை
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில், காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோயிலுக்கு வந்து காளையை அடக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவபெருமான் அந்த காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது. இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது.

பொதுவாக பிரகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர். சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலும் ஒன்று. காளையை சிவபெருமான அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது.