Tag Archives: திருநெல்வேலி

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மேலமாட வீதி, திருநெல்வேலி

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மேலமாட வீதி, திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

+91 98940 20443, 95859 58594

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்மர்

உற்சவர்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள்

தாயார்

மகாலெட்சுமி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மேலமாட வீதி, திருநெல்வேலி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக, பகவான் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் தனிச்சிறப்பு பெற்றது நரசிம்ம அவதாரம். அசுர குடும்பத்தில் பிறந்தாலும், பக்தியால் தன்னை வளைத்துப் போட்ட ஒரு குழந்தைக்காக உருவானவரே நரசிம்மர். இரண்யன் என்னும் அசுரன், தன்னையே நாட்டு மக்கள் வணங்க வேண்டுமென உத்தரவிட்டான். அவனது மகன் பிரகலாதன், பகவான் நாராயணனின் பக்தனாக விளங்கினான். தந்தை மீது மரியாதை கொண்டாலும் கடவுளாக ஏற்க மறுத்தான். இரண்யன், பெற்ற பிள்ளை என்றும் பாராமல் பலவகையிலும் கொடுமை செய்தான். அவனைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் திருமால். தவ வலிமை மிக்க இரண்யன் தனக்கு மனிதர், மிருகம், பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். எனவே திருமால் சிங்க முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான வடிவில் தோன்றி அவனை அழிக்க முற்பட்டார். “உன் ஹரி எங்கே இருக்கிறான்?” என்று இரண்யன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனவர், உலகிலுள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட தன்னை வியாபித்துக் கொண்டார். இவ்வாறு, பக்தனுக்காக பதறிப்போய் தன்னை பரப்பிக் கொண்ட திவ்ய அவதாரம் நரசிம்மவதாரம். இறுதியில், பிரகலாதன் ஒரு தூணைக் காட்ட அதைப் பிளந்தான் இரண்யன். உள்ளிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். இரண்யனைத் தன் மடி மீது வைத்து அவனைப் பிளந்தார். அவரது உக்ரத்தைத் தணிக்க லட்சுமி பிராட்டியே பூமிக்கு வந்து பகவானின் மடியில் அமர்ந்தாள். அதுமுதல் அவர் லட்சுமி நரசிம்மர்என பெயர் பெற்றார்.

அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி

அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 462 – 233 5340 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வீரராகவர், வரதராஜர்

உற்சவர்

வரதராஜர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திருநெல்வேலி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ண பரமராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜப்பெருமாளின் சிறந்த பக்தரான இவர், ஒருசமயம் தாமிரபரணியிலுள்ள பத்மநாபதீர்த்தத்தில் (குறுக்குத் துறை) குளித்துக்கொண்டிருந்த போது நீலநிறக் கல்லால் ஆன பெருமாள் சிலை கிடைத்தது. அதைத் தனியே கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தார். வரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டினார். ஒருமுறை எதிரி நாட்டு அரசர், கிருஷ்ணராஜ மன்னர் மீது போர் தொடுத்து வந்தார். சிலை கிடைத்த பிறகு பெருமாள் வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியதால், போரில் எதிரி மன்னரை எதிர்த்துப் போரிடத் தக்க படைபலமின்றி இருந்தார். தனது நாட்டு மக்களைக்காத்து அருள்புரிந்திடும்படி பெருமாளிடம் மனம் உருகி முறையிட்டார். அவரது முறையீட்டிற்கு செவிசாய்த்த பெருமாள், மன்னர் வேடத்தில் போர்க்களத்திற்கு சென்று எதிரிநாட்டுப் படை வீரர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றார். இவ்வாறு, மன்னருக்காக போர்க்களத்தில் வீரத்தளபதியாக அவதரித்து வந்த பெருமாளே இவ்விடத்தில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

ஒருமுறை வீரராகவரின் பக்தர் ஒருவர் தாமிரபரணி ஆற்றில் தனது மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு நீராடி, சுவாமியைத் தரிசனம் செய்ய வந்தார். அப்போது சுவாமியை நேரடியாக தரிசனம் செய்யவேண்டுமென அதீத ஆவல் எழுந்தது. பெருமாளோ வரவில்லை. எனவே, உண்ணாவிரதம் இருந்தார். ஒருநாள் சுவாமிக்கு உச்சிகாலை பூஜை நடந்து கொண்டிருந்தது. பக்தர் மயக்க நிலைக்குச் செல்ல இருந்த நிலையில், அவரது பக்திப்பெருக்கில் அகம் மகிழ்ந்த சுவாமி அவருக்கு காட்சி தந்து அருள்புரிந்தாராம். இவ்வாறு, பக்தனின் வேண்டுதலுக்கு இரங்குபவராக இத்தலத்தில் பெருமாள் வீற்றிருந்து அருள்புரிகிறார்.