Tag Archives: வெள்ளூர்

அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், வெள்ளூர்

அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், வெள்ளூர், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்.

+91 94437 80719 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருக்காமேஸ்வரர்

தாயார்

சிவகாமசுந்தரி

தல விருட்சம்

வில்வமரம்

தீர்த்தம்

ஐஸ்வர்ய தீர்த்தம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

வில்வாரண்ய க்ஷேத்திரம்

ஊர்

வெள்ளூர்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

தட்சன் யாகம் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான அதாவது தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? பாசம் விரட்டியது. எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள். “பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும்என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள். இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும்? பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா? சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம். இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும்? காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும்? இதற்காக அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காமபாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான். தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான். நடந்ததையும், நடக்கப் போவதையும் அறியாதவரா ஈசன்? வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். விளைவு பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், தேவி சிவகாம சுந்தரியாகவும் நமக்குக் காட்சி தருகிறார்கள்.