Tag Archives: திருப்பயத்தங்குடி

அருள்மிகு திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்பயத்தங்குடி

அருள்மிகு திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4366 – 272 423, 98658 44677 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருப்பயற்றுநாதர் (முத்கபுரீஸ்வரர்)
அம்மன் காவியங்கண்ணி (நேத்ராம்பாள்)
தல விருட்சம் சிலந்திமரம்
தீர்த்தம் கருணாதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பயற்றூர், திருப்பயற்றங்குடி
ஊர் திருப்பயத்தங்குடி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் அப்பர்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு, மிளகு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்நாளில் வணிகர் ஒருவர், மிளகு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக, இவ்வூர் வழியாக வண்டியில் ஏற்றிவந்தார். அப்போது அருகில் சுங்கச்சாவடி இருப்பதை அறிந்தார். மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும். பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. இவர் கொண்டு செல்லும் மிளகு மூட்டைகளுக்கு சுங்கவரி கட்டினால் வணிகருக்கு வருமானம் ஏதும் கிடைக்காது. இதை உணர்ந்த வணிகள் மிகவும் வருந்தினார். சிவ பக்தராகிய இவர், இத்தல சிவபெருமானிடம்,”இறைவா. சுங்கவரி செலுத்தினால் எனக்கு பேரிழப்பு ஏற்படும். தங்கள் திருவருளால் இந்த மிளகு மூட்டைகளை, சுங்கச்சாவடி கடந்து போகும் வரை பயறு மூட்டைகளாக மாற்றிஅருள்புரியவேண்டும்என வேண்டினார். பின் அங்கேயே உறங்கினார். அடியாரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த இறைவன் மிளகு மூட்டைகளைப் பயறு மூட்டைகளாக மாற்றிவிட்டார். அடியவராக வணிகரின் கனவில் மிளகு பயறாக மாற்றப்பட்டதை அறிவித்தார். பொழுது விடிந்தது. கனவில் இறைவன் கூறியதை கேட்டு மகிழந்த வணிகர் நாகப்பட்டினம் நோக்கி பயணத்தை துவக்கினார். சுங்கச்சாவடி வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறுமூடைகளாக இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பிவிட்டனர். சுங்கச்சாவடி கடந்த பின் பயறு மூடைகள் அனைத்தும் மிளகு மூடைகளாக மாறிவிட்டன. வணிகர் மிளகு விற்ற பணத்தையெல்லாம், சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் திருப்பயற்றூர்எனவும், இறைவன் திருப்பயற்றுநாதர்எனவும் அழைக்கப்படுகிறார். பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இங்கு துர்க்கை கிடையாது. வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது நம்பிக்கை. இத்தலவிநாயகர் சித்திபுத்தி விநாயகர்எனப்படுகிறார்.