Tag Archives: இருகாலூர்

அருள்மிகு அழகுராயப்பெருமான், இருகாலூர்

அருள்மிகு அழகுராயப்பெருமான், இருகாலூர், ஈரோடு மாவட்டம்

கொங்கு வள நாட்டின் ஒரு பகுதியான, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வட்டத்தில் உள்ளது இருகாலூர் கிராமம். இங்கு கோயில்கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அழகுராயப்பெருமான்.

இருகாலூரின் சிறப்பு

புராண காலத்திலிருந்தே இவ்வூர் இருந்ததாக செவிவழிச் செய்தி. கரிகாற் சோழனால் ஆரையநாடு என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டின் வடபகுதியாகும் இது.

இவ்வூர் நான்கு மாடங்களுடன் இருந்ததாகவும், பல சமூக மக்களும் வாழ்ந்து வந்ததாகவும், பெரிய வர்த்தக தலமாகவும் விளங்கியதாகவும், இவ்வூரைச் சுற்றிலும் பழைமைவாய்ந்த அம்மன் கோயில், புராதனச் சிவன்கோயில், பிரசித்திபெற்ற பொன்காத்த ஐயன் கோயில் ஆகியவை அமைந்திருந்தனவாம்.

பெயர்க் காரணம்:

இராமரும் இலட்சுமணரும் சீதாதேவியைத் தேடிவரும்போது, நீலகிரி வழியாக கோத்தகிரி, கீழ்க் கோத்தகிரியைத் தாண்டி சோளுர் மட்டம் வந்ததாகவும் தலவரலாறு தெரிவிக்கிறது. அங்கு ஸ்ரீராமர் பாதம் இருப்பதால் தற்போது (ஸ்ரீ சருகுரங்கர்) கோயிலுக்குப் புரட்டாசி 1, 3, 5வது வாரங்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். ஸ்ரீராமபிரானின் இரு திருப்பாதங்கள் (கால்கள்) பதிந்ததால் இருகாலூர் என இக்கிராமம் அழைக்கப்பட்டு வந்ததாம்.

மேலும், இத்திருத்தலம் இரண்டு கால்வாய்களால் சூழப்பட்டு இருப்பதால் இருகாலூர் என அழைக்கப்படுவதாகப் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், ஸ்ரீமந் நாராயணனின் இரு திருப்பாதங்கள் இவ்வூரில் பட்டுப் புனிதமாக விளங்கியதாலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இத்தலம், இயற்கையின் சீற்றத்தால் தற்போது வறட்சி மிகுந்த குக்கிராமமாகத் உள்ளது.