Tag Archives: தேவிபட்டிணம்

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம்

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம், ராமநாதபுரம் மாவட்டம்.

நீராடல் : எல்லாநாட்களிலும் எல்லாகாலங்களிலும் காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீராடலாம்

மூலவர் நவகிரகங்கள்
தீர்த்தம் கடல் தீர்த்தம் (அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம்)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவிப்பூர் (தேவிபுரம்)
ஊர் தேவிபட்டிணம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன், தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டிணத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்காரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டிணமாக வழங்கிவருகிறது.

படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் இராவணன். ஆனால் இராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே இராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது. இராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த இராமன் சீதையை மீட்பதற்காக தென்திசைநோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி இராமபிரானும் உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது. பின்பு 15 கி.மீ., தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்தார். இராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணல் எடுத்து, நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. இராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம்.