Tag Archives: திருப்பு(ன்)ங்கூர்

அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில், திருப்புங்கூர்

அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில், திருப்புங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 9486717634 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவலோகநாதர்
அம்மன் சவுந்திரநாயகி
தல விருட்சம் புங்கமரம்
தீர்த்தம் இரிஷப தீர்த்தம்,தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புன்கூர்
ஊர் திருப்புன்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார் என்பவர். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானைத் தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. நாளை போகலாம், நாளை போகலாம் என்றே இருந்தார். அதனால் அவருக்கு திருநாளைப்போவார்என்று கூட பெயர் உண்டு. ஒருநாள் முதலாளி அனுமதி கிடைத்து சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வருகிறார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது. கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார். சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண் டிருந்தது. என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகுகிறார். “மலைபோல் நந்தி படுத்திருக்கேஎன்று பாடுகிறார். துவார பாலகர்கள் மூலவரிடம் நந்தனார் வந்திருக்கிறார் என்று கூற சிவபெருமான் நந்தானாரின் பக்தியை மெச்சி, தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்தியை சற்றே விலகி இருக்குமாறு பணித்தார். இறைவன் சொல்படி நந்தி விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவதலம் இது. நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகிய இருக்கச் சொன்ன தலம். எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் எல்லாக்கோயில்களிலும் நேராக இருப்பர். ஆனால் இங்கு தலை சாய்த்து இருப்பர். சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளளது.

புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் இந்த கோயிலுக்கு புங்கூர்கோயில்என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். சிறிய அளவில் உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான இலிங்கமே. பின் வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. புற்று வடிவமாக மூலவர் இருப்பதால் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு குவளையை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். சுவாமியை திருக்குவளை சாத்தியுள்ள நிலையில்தான் தினசரி பக்தர்களால் காணமுடியும்.