Tag Archives: பாலமலை

அருள்கு அரங்கநாதர் திருக்கோயில், பாலமலை

அருள்கு அரங்கநாதர் திருக்கோயில், பாலமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

ஊரின் நடுவில் உள்ள சமதளத்தில் கோயில் கட்டுவதே கடினம். பொருள் தேடி, ஆள் தேடி, அவர்களை ஒன்று திரட்டித் திருப்பணி செய்ய ஆண்டுகள் பலவாகும். இது இப்படியிருக்க, மலையுச்சியில் கோயில் கட்டுவது என்பது எத்துனை கடினம். ஆட்களை மலையுச்சிக்கு கொண்டு செல்லவேண்டும்; அவர்களுக்கு உணவு தயாரிக்கவேண்டும்; அதற்கு அரிசி முதலிய உணவுப் பண்டங்களை மேலேற்றவேண்டும்; அதற்கும் ஆட்படை வேண்டும்.

சரி. இவ்வளவையும் செய்து கோயில் கட்டியாகிற்று. தினசரி பூசை செய்ய தினம் பூசாரி மேலே போய்த் திரும்பி வரவேண்டும். இவ்வளவு உயரத்தில் ஆண்டவன் அமர்ந்திருக்கின்றானே! எப்படி மல ஏறுவது? என்று அங்கலாய்க்கும் இக்காலத்துப் பக்தர்களைப் போலன்றி மக்கள் எவ்வாறு மேலே சென்று இறைவனை வணங்கினார்கள். இவ்வாறெல்லம் எண்ணும்போது மலைப்பாக உள்ளது.

சித்தர்கள் தாங்கள் வணங்குவதற்காக மலைக்கு மேல் இறை வடிவங்களை பிரதிஷ்டை செய்தார்கள் என்று சித்தர் புராணங்கள் கூறுகின்றன. தவம் இருந்த முனிவர்களும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட சில அன்பர்களும் இத்தகைய பிரதிஷ்டைகளை வெவ்வேறு காலகட்டங்களில் செய்துள்ளார்கள்.

இத்தகைய கோயில்களில் ஒன்றுதான் பாலமலை ஸ்ரீஅரங்கநாதர் திருக்கோயில்.

கோவையில் இருந்து மேட்டுபாளையம் வழியாக ஊட்டிக்குச் செல்லும் சாலையில் வரும் ஊர், பெரியநாயக்கன்பாளையம். பெரியநாயக்கன்பாளையத்துக்கு நேர்மேற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மிதமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. ஆலயத்துக்கு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், அரங்கன் ஆலயத் திருவிழாக்களில் காட்டும் பங்கும் பக்தியும் பாராட்டிற்குறியது.

கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்த மலைவாசிகள், நகரத்துக்குத் தான் செல்லவேண்டும்.

யுகம் யுகமாக, எண்ணற்ற பக்தர்களுக்கும், மகான்களுக்கம், மன்னர்களுக்கம் அருள்பாலித்தவர் இந்த அரங்கன்.