Tag Archives: கும்பகோணம்

அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இராமசாமி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கும்பகோணம்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக விஷ்ணுவே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சித்திரை புனர்பூசம் நட்சத்திரம் நவமி திதி அவரது பிறந்த நாளாகும். தசரதரின் முதல் மனைவி கவுசல்யா அந்த தெய்வ மகனைப் பெற்ற புண்ணியவதி. இதையடுத்து விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம் பூமிக்கு வர ஆசைப்பட்டது. அது பரதன் என்ற பெயரில், இராமன் பிறந்த மறுநாள் பூசம் நட்சத்திரத்தில், இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் அவதரித்தது. விஷ்ணு பூமிக்கு வந்த போது அவருடன் ஆதிசேஷனும் வருவேன் என அடம் பிடித்தது. தன்னை தினமும் தாங்கித் தூங்க வைக்கும் சேவை புரிந்த சேஷனின் சேவையைப் பாராட்டி, விஷ்ணு அதை தன் தம்பியாக ஏற்றார். மூன்றாவது மனைவி சுமித்திரைக்கு இராமன் பிறந்த மூன்றாம் நாள் ஆயில்ய நட்சத்திரத்தில் அக்குழந்தை பிறந்தது. அதே நாளில் சுமித்திரையின் வயிற்றில் சத்ருக்கனன், விஷ்ணுவின் கையிலுள்ள சங்கின் அவதாரமாக அவதரித்தார். இவர்களில் இலட்சுமணன் இராமனை மிகவும் நேசித்தார். குழந்தையாக இருந்த போது இவர் நான்காம் தொட்டிலில் கிடந்தார். இராமன் முதல் தொட்டிலில் படுத்திருந்தார். இலட்சுமணக் குழந்தை அழுதது. எவ்வளவோ ஆறுதல்படுத்தியும் முடியவில்லை. அதன் கண்கள் இராமனின் தொட்டிலை நோக்கி திரும்பியிருந்ததைக் கண்ட வசிஷ்டர், ஒரே தொட்டிலில் இரண்டு குழந்தைகளையும் படுக்க வைத்தார். இராமனைத் தன் மீது தூக்கிப் போட்டுக் கொண்ட அக்குழந்தை அழுகையை நிறுத்தியது. அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர் இராம சகோதரர்கள். இராமன் காட்டுக்கு போன வேளையில், அதற்கு காரணமான தன் தாயை நிந்தனை செய்தவர் பரதன். மேலும், அண்ணனுக்கு பதிலாக தற்காலிக ஆட்சி நடத்திய போது, அவரது பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து மரியாதை செய்து வந்தார். சத்ருக்கனன் தன் அண்ணன் இராமன் மீது கொண்டிருந்த அன்பிற்கு ஈடு இணை சொல்லமுடியாது. அண்ணன் காட்டில் இருந்த போது, அங்கிருந்து தன்னால் நகர முடியாது என அந்த குட்டித்தம்பி அடம் பிடித்தார். இராமனின் ஆறுதலின் பேரிலேயே ஊர் திரும்பினான். ஒருமித்த சகோதரர்களுக்கு, ஒருமித்த சகோதரிகள் மணவாட்டிகளாக அமைந்தனர். இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் உடன் பிறந்த சகோதரிகளான சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரத சத்ருக்கனருக்கு ஜனக மன்னரின் தம்பி குசத்வஜனின் புத்திரிகளான மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும், ஆசை வார்த்தைகள் காட்டினாலும் இந்த அன்புச் சகோதரர்களை யாராலும் பிரிக்க இயலவில்லை. பட்டாபிஷேக நாளன்று தன் தம்பிகளுடனும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனக்கு சேவை செய்த அனுமானுடனும், காட்டில் தன்னோடு கஷ்டப்பட்ட மனைவி சீதையுடனும் கொலு வீற்றிருந்தார். அயோத்தியில் மட்டுமே உள்ள இக்காட்சியை தென்னக மக்களும் காண வேண்டும் என தெற்கிலிருந்து பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்ற மன்னர்கள், தீர்த்த நகரும், புனித இடமும் ஆன கும்பகோணத்தில் இக் காட்சியை வடிவமைத்தனர்.

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், மகாமகம் குளம் வடகரை, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மூலவர் அகோர வீரபத்திரர்
அம்மன் பத்திரகாளி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மகாமகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குடந்தை
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது நதிகளில், பக்தர்கள் மூழ்கிக் கழித்த பாவங்கள் அதிகமாக சேரவே, அவை வருத்தப்பட்டன. கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களது பாவச்சுமையைக் குறைக்குமாறு முறையிட்டன. இதை ஏற்ற சிவன், மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு கூறினார். அதன்படி நவநதிகளும் இத்தலம் வந்தன. சிவன், அவர்களுக்கு காவலராக, வீரபத்திரரை அனுப்பி வைத்தார். அவரே குளக்கரையில் வீற்றிருக்கிறார்.

இராஜகோபுரத்துடன் அமைந்த இக்கோயிலில், சுவாமி கோரைப்பற்களுடன் உள்ளார். கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளன. அருகில் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். தலைக்கு மேல் ஜலதாரை (நீர் பாத்திரம்) இருக்கிறது. பத்திரகாளி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இத்தல வீரபத்திரருக்கு கங்கை வீரன், கங்கை வீரேஸ்வரர்என்ற பெயர்களும் உண்டு. நவநதிகளில் பிரதானமனாது கங்கை. கங்கையின் தலைமையில், இங்கு வந்து பாவம் போக்கிக்கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் இப்பெயர். சுவாமி சன்னதி எதிரில் உள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது.