Tag Archives: நன்னிலம்

அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம்

அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம், திருவாரூர் மாவட்டம்.

+91- 94426 82346, +91- 99432 09771 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மதுவனேஸ்வரர் (கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாச நாதர்)
அம்மன் மதுவனேஸ்வரி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில்
ஊர் நன்னிலம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

முன்னொரு காலத்தில் தேவர்களின் சபையில் ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் மகாமேருவின் ஆயிரம் சிகரங்களையும் மறைத்து கொண்டான். எனவே வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இதனால் எல்லா உலகங்களும் அதிர்வடைந்தது. உலகமே அழிந்து விடும் என அஞ்சிய தேவர்கள் ஆதிசேஷனிடம் வேண்டிக்கொள்ள, மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை மட்டும் விட்டுக்கொடுத்தான். வாயுபகவான் அந்த சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்து செல்லும்போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாகத் தல புராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கிருதா யுகத்தில் பிருகத்ராஜன் என்ற மன்னன் செய்த தவப்பயனாக சிவபெருமான் இத்தலத்தில் தேஜோ லிங்கமாய்காட்சி தந்தார். துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களைத் தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து, இலிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் மதுவனேஸ்வரர்என்றும் அம்மன் மதுவன நாயகிஎன்றும் இத்தலம் மதுவனம்என்றும் அழைக்கப்பட்டது. சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.