Tag Archives: வாலாஜாபேட்டை

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் உதித்த மகாபுருஷர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.

தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.