Tag Archives: திருவான்மியூர்

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை, சென்னை மாவட்டம்.

+91 – 44 – 2441 0477 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மருந்தீஸ்வரர்
உற்சவர் தியாகராஜர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் பஞ்ச தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவான்மீகியூர்
ஊர் திருவான்மியூர்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அவருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு, சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் பால்வண்ணநாதர்என்றும் அழைக்கப்படுகிறார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த இலிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.