Tag Archives: உதயநேரி-பாலாமடை

அருள்மிகு வேங்கிடாசலபதி திருக்கோயில், உதயநேரிபாலாமடை

அருள்மிகு வேங்கிடாசலபதி திருக்கோயில், உதயநேரிபாலாமடை, திருநெல்வேலி

நெல்லைச் சீமைக்கு புகழ் சேர்க்கும் பல விஷயங்களில் அங்கு பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி முக்கியமானது. அந்நதியின் சிறப்பைப் பற்றி பல இதிகாச, புராணங்கள் விஷேடமாகக் கூறுகின்றன. அவற்றிலிருந்து தாமிரபரணி நதி தீர்த்தம் மிகவும் பரிசுத்தமானது என்பது தெரிய வருகிறது. தட்சிண கங்கை, பொருநை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது இந்த நதி. கங்கை நதியை விடவும் அதிக புனிதமானது என விஷ்ணு புராணம் கூறுகிறது.

ஒரு சமயம் கங்காதேவி, பகவான் மஹாவிஷ்ணுவிடம் சென்று,”மாந்தர்கள் என்னிடம் வந்து நீராடி தங்களது பாவங்களைப்போக்கிக் கொள்கின்றனர். இவ்வாறு என்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை நான் எவ்வாறு போக்குவேன்?” என வருத்தத்துடன் கேட்டபோது, மஹாவிஷ்ணு, அவளிடம்,”ஆயிரக்கணக்கான ரிஷிகளும், முனிவர்களும் பலகாலம் தாமிரபரணி நதியின் கரைகளில் கடும் தவம் இருந்து வல்லமை பெற்றுள்ளனர். எனவே, அந்த நதி மிகவும் புனிதமானது. அதில் ஸ்நானம் செய்து உனது பாவங்களை நீக்கிக்கொள்எனக்கூறினார். கங்கையும் அவ்வாறே செய்து மீண்டும் புனிதம் அடைந்தாள் என விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.