அருள்மிகு வேங்கிடாசலபதி திருக்கோயில், உதயநேரிபாலாமடை
அருள்மிகு வேங்கிடாசலபதி திருக்கோயில், உதயநேரிபாலாமடை, திருநெல்வேலி
நெல்லைச் சீமைக்கு புகழ் சேர்க்கும் பல விஷயங்களில் அங்கு பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி முக்கியமானது. அந்நதியின் சிறப்பைப் பற்றி பல இதிகாச, புராணங்கள் விஷேடமாகக் கூறுகின்றன. அவற்றிலிருந்து தாமிரபரணி நதி தீர்த்தம் மிகவும் பரிசுத்தமானது என்பது தெரிய வருகிறது. தட்சிண கங்கை, பொருநை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது இந்த நதி. கங்கை நதியை விடவும் அதிக புனிதமானது என விஷ்ணு புராணம் கூறுகிறது.
ஒரு சமயம் கங்காதேவி, பகவான் மஹாவிஷ்ணுவிடம் சென்று,”மாந்தர்கள் என்னிடம் வந்து நீராடி தங்களது பாவங்களைப்போக்கிக் கொள்கின்றனர். இவ்வாறு என்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை நான் எவ்வாறு போக்குவேன்?” என வருத்தத்துடன் கேட்டபோது, மஹாவிஷ்ணு, அவளிடம்,”ஆயிரக்கணக்கான ரிஷிகளும், முனிவர்களும் பலகாலம் தாமிரபரணி நதியின் கரைகளில் கடும் தவம் இருந்து வல்லமை பெற்றுள்ளனர். எனவே, அந்த நதி மிகவும் புனிதமானது. அதில் ஸ்நானம் செய்து உனது பாவங்களை நீக்கிக்கொள்” எனக்கூறினார். கங்கையும் அவ்வாறே செய்து மீண்டும் புனிதம் அடைந்தாள் என விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய புனித தாமிரபரணி நதியின் உற்பத்தி ஸ்தானம் முதல் அது கடலில் சங்கமிக்கும் இடம் வரை அநேக புண்யத் தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவ்விடங்களில் நமது முன்னோர்கள் பல சிவ, விஷ்ணு ஆலயங்களை நிர்மாணித்துள்ளார் . இன்றளவும் அவை புண்ணியத் தலங்களாக உள்ளன.
அவற்றுள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள “மங்கள தீர்த்தம்” எனும் தீர்த்தக் கட்டம் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு உதயநேரி பாலாமடை எனும் சிறிய கிராமத்தில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வேங்கிடாசலபதி திருக்கோயில் உள்ளது. இங்குள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களின் பாசனத்திற்காக உதயணன் என்ற சிற்றரசனால் ஏற்படுத்தப்பட்ட பெரிய ஏரி ஒன்று உள்ளது. அரசனின் பெயரால் இது உதயணன் ஏரி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி உதயநேரி என அழைக்கப்படலாயிற்று.
இக்கிராமம் பாலாமடை என பெயர் பெற்றதற்கு புராண வரலாறு ஒன்று, மத்ஸ்ய புராணத்தில் உள்ளது. ஆபஸ்தம்ப முனிவர், பகவான் மஹா விஷ்ணுவை நேரில் தரிசிக்கும் நோக்கத்துடன், காற்றை மாத்திரமே ஆகாரமாகக் கொண்டு நீண்ட காலம் கடுந்தவம் புரிந்தார். அதில் திருப்தி அடைந்த மஹாவிஷ்ணு அவர் முன் தோன்றினார்.
அப்போது அங்கு வந்த, கருடன், விஷ்வக் சேனர் மற்றும் பல முனிவர்களுடன் ஆபஸ்தம்ப முனிவர், விஷ்ணுவை மகிழ்ச்சியுடன் பூஜித்தார். வெகுவேகமாக மண்டப நிர்மாணம் செய்து, பாற்கடலில் இருந்து பாலை ஆயிரம் தங்கக் குடங்களில் கொண்டு வந்து, அங்கிருந்த மற்ற முனிவர்களுடன், வேத மந்திரங்களை உச்சரித்து பகவானுக்கு அபிஷேகம் செய்தார். அந்த அபிஷேகப்பால், மடைகளாகப் பாயத்துவங்கி வயல்களில் பாய்ந்தது. அதைக் கண்ட மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அதுமுதல், மஹாவிஷ்ணு மங்கள மூர்த்தியாக இங்கு கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பாண்டிய மன்னர் குலசேகரப்பாண்டியன் குடும்பத்தில் சிலருக்கு, தீராத வியாதி ஏற்பட்டது. பலவித வைத்தியங்கள் செய்தும் குணம் ஆகவில்லை. மன்னர் இப்பெருமாள் கோவிலைப்பற்றி கேள்விப்பட்டு, இங்கு வந்து விஷேஷ வழிபாடுகள் செய்தபின், அவரது குடும்பத்தினருக்குப் பூரண குணம் அடைந்தது. மன்னர் மகிழ்ச்சியடைந்து, இக்கோவிலுக்கு நிலங்களை எழுதி வைத்தார் என்ற விவரங்கள், கருவறைக்கு வெளியே உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.
பாண்டிய மன்னரின் இடர்தீர்த்த வேங்கிடாசலபதி பெருமாள், இன்றளவும் பக்தர்களின் தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். மூலவருக்குப் பால் அபிஷேகம் செய்து, அந்தப் பாலை அருந்தி வந்ததன் விளைவாக, பலர் குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். மனோ வியாதி, தோல் வியாதிகளும் இவ்வாறு செய்ததால் குணமாகியுள்ளனவாம்.
கர்ப்பகிருஹத்தில் வேங்கிடாசலபதி பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தில் பஞ்ச லோகத்திலான உற்சவ மூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் உள்ளார். அவரை நோக்கியபடி, கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் மஹா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார். மேலும், இம்மஹா மண்டபத்தில் வலது, இடது பாகங்களில் லக்ஷ்மி தேவியும் தெற்கு நோக்கிய நிலையில் விஷ்வக்சேனர், உடையவர், மணவாள முனிகள் ஆகியோரும் சிலா ரூபத்தில் உள்ளனர். அவர்களது இடது மூலையில், கையில் வெண்ணையுடன் கிருஷ்ணரின் சிலை உள்ளது. பலரது கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும் வரதராக உள்ளார்.
மேலும் மண்டபத்தின் இருதூண்களில் ஆஞ்சநேயரும், விநாயகப்பெருமாளும் சிலா ரூபமாக உள்ளனர். இந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்தால் பல நன்மைகள் நடக்கும். மகா மண்டபத்தில், பெரிய அளவில், பித்தளையில் செய்யப்பட்ட அழகிய கருடாழ்வார் காட்சி தருகிறார்.
தினமும் காலை, இரவு இரு வேளைகள் பூஜை நடைபெறுகிறது. வருஷாபிஷேகம் உற்சவம் தவிர, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இரவில் கருட சேவை நடைபெறுகிறது. கூடுதலாக ஒரு கருட சேவை புரட்டாசி திருவோணம் நாளில் நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை பூஜையும், பஜனையும் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளின் சயனசேவையும், மாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவமும், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் கருட சேவையும் செய்யப்படுகின்றன.
இக்கோயிலுக்கு வருகை தந்து பெருமாளை ஆராதித்து, வழிபாடுகள் செய்வோர் ,அவரது அருளைப்பெற்று வாழ்வில் மென்மேலும் சிறப்படைந்து, வளமான வாழ்வைப் பெறுவார்கள் என்பது உறுதி என ஊரார் சொல்லுகின்றானர்.
திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உதயநேரிபாலாமடை கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
Leave a Reply