Tag Archives: திருக்கடித்தானம்

அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்

அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்– 686 105, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 481-244 8455 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அற்புதநாராயணன் (அம்ருத நாராயணன்)
தாயார் கற்பகவல்லி நாச்சியார்
தீர்த்தம் பூமி தீர்த்தம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்கடித்தானம்
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். இவனது நந்தவனத்தில் அரிய மலர்கள் பூத்து குலுங்கின. இந்த மலர்களை தேவர்கள் பறித்துச் சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல் போனதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூவைப் பறிக்க வந்த போது, காவலர்கள் தேவர்கள் எனத் தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது. இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, “நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் நாங்கள் வானுலகம் செல்ல முடியும்எனத் தேவர்கள் கூறினர். இதைக்கேட்ட மன்னன் மகிழ்ச்சியுடன் தேவர்களை அழைத்துக்கொண்டு, இத்தலத்து பெருமாளின் முன்னிலையில் தனது ஏகாதசி விரதபலனை தேவர்களுக்குத் தானமாக அளித்தான். தேவர்களும் வானுலகம் சென்றனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் இத்தலத்திற்கு திருக்கடித்தானம்எனப் பெயர் வந்ததாக கூறுவர்.

இத்தலத்துப் பெருமாளை சகாதேவன் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்திய சகாதேவன், அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றான். அப்போது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றி சகாதேவனின் துயர் துடைத்ததாம். இதன் காரணமாக இத்தலப் பெருமாள் அற்புத நாராயணன்என அழைக்கப்படுகிறார். இப்பகுதியில் சகாதேவன் கட்டிய கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது.

வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். எனவே இக்கோயிலில் இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம் உள்ளது. இது இத்தலத்தின் சிறப்பு. இதில் நரசிம்மரின் உருவத்தைப் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறுவர். கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களது சன்னதிக்கு கதவுகள் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மரத்துவாரங்கள் வழியாகத்தான் இவர்களை தரிசிக்க முடியும். நரசிம்மருக்கு, அவரது உக்கிரத்தை குறைப்பதற்காக, பால் பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்குரிய ஒவ்வொரு பூஜையின் போதும் நாராயணீயம்சொல்லப்படுகிறது. இத்தலப் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை ருக்மாங்கதன் மற்றும் தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர்.