Tag Archives: அரக்கோணம்

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாகசாலை, மணவூர் வழி, அரக்கோணம்

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாகசாலை, மணவூர் வழி, அரக்கோணம், சென்னை மாவட்டம்.

 

உலக உயிர்களை உய்விப்பதற்காகவே கருணையே வடிவான கந்தப் பெருமான் தோன்றினாள் என்பதை கந்தபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது. அத்தகைய முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள பழம்பெரும் பதிகளில் ஒன்று, பாகை என வழங்கும் பாகசாலையாகும். குன்று தோராடும் குமரக்கடவுள் இங்கு கங்கை நதிக்கு இணையான, குசஸ்தலை ஆற்றின் கரையில் கோயில் கொண்டுள்ளார்.

ஆள் உயரத்திருமேனியுடன், நான்கு திருக்கரங்களுடன் பிரமசாஸ்தா எனும் கம்பீரமான திருக்கோலத்தில் பாலசுப்ரமணியன் எனும் திருநாமம் கொண்டு மந்திர மயிலையும், சக்தி வடிவேலையும் தாங்கித் தம்மை தரிசிப்போர் பரவசப்படும் விதத்தில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் வள்ளலாகக் காட்சி தருகிறார். பிரம்ம தேவன், நாரதர், சித்ரகுப்தன், அகத்தியர் ஆகியோர் இங்கு முருகனிடம் உபதேசம் பெற்றனர். நாக கன்னியர்கள், சித்தர்கள், மகரிஷிகள் ஆகியோர் முருகனை வழிபட்டு வரங்கள் பெற்றனர் என மச்சபுராணம், கூர்ம புராணம், பவிஷ்ய புராணம் போன்ற பழம்பெரும் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.