Tag Archives: கல்லுக்குழி

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், கல்லுக்குழி, திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 100 வருடங்களுக்கு முன்
ஊர் கல்லுக்குழி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் தென்கோடியில் சிறிய அளவில் கோயில் கொண்டு நடைபாதை ஆஞ்சநேயராக அருள்புரிந்து கொண்டிருந்தார். அங்கு பணியாற்றும் ரயில்வே ஊழியர்களும், பயணிக்க வந்த மக்களும் இவரை வழிபடுவது வழக்கம்.


1928-
ம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து ஈரோடு ஆகிய இரண்டையும் ரயில் பாதையில் இணைக்கத் திட்டமிட்டுப் பணிகள் ஆரம்பமான நேரத்தில், திருச்சி ரயில்வே மாவட்ட ஏஜெண்ட் மற்றும் பொது மேலாளராக பதவி வகித்த திரு. ஆர்ம்ஸ்பி என்ற வெள்ளைக்காரர் ரயில்வே நடைபாதை ஓரத்திலிருந்த ஆஞ்சநேயரை அகற்ற உத்தரவிட்டார். அந்தச் சிறிய கோயில் இடிக்கப்பட்டது. ஆனால், ஆஞ்சநேயர் விக்கிரகத்தை அகற்ற முடியவில்லை. அன்றிரவு, வெள்ளைக்கார ரயில்வே பொது மேலாளர் அந்த விக்கிரகம் இருந்த இடத்தில் அருகில் இரண்டு இரயில் வண்டிகளின் இன்ஜின்கள் தடம் புரண்டதாகக் கனவு கண்டார். காலையில் அவசர அவசரமாக எழுந்து வந்து பார்த்தால், அவர் கனவில் கண்ட காட்சி அப்படியே இருப்பதைக் கண்டு அதிசியத்தார். இந்த விபத்தால் யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், இரயில் பாதை பழுதடைந்து ரயில்வே போக்குவரத்து தடைப்பட்டது. அப்பொழுதான் அந்த வெள்ளைக்கார அதிகாரிக்குத் தன் தவறு புரிந்தது. உடனே, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொன்னார். இந்த இரயில் நிலையத்திற்கு அருகிலேயே வேறு இடத்தைப் பெரிய அளவில் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடம் தான் கல்லுக்குழி. ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்த அதிகாரி, கோயில் கட்டுவதற்கு பொருளுதவியும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தாராம். கோயில் முழுவதுமாக உருவானதும், ஒரு சுபநாளில் பூஜைகள் செய்து, பிறகு முறைப்படி பிளாட் பாரத்திலிருந்த அந்த விக்கிரகத்தை எளிதாக அகற்ற முடிந்ததாம். புதிய இடத்தில் கல்லுக்குழி என்று சொல்லப்படும் இரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் கட்டப்பட்ட கோயிலில் ஆஞ்சநேயர் மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.