Tag Archives: கருவேலி

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்), திருவாரூர் மாவட்டம்.

+91-4366-273 900, 94429 32942 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சற்குணேஸ்வரர்
அம்மன் சர்வாங்க நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் எம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கருவிலிக்கொட்டிட்டை, திருக்கருவிலி
ஊர் கருவேலி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள். அழைப்பில்லாமல் வந்த மகளை அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள். தாட்சாயணியின் பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல் ஆடினார். சிவனின் உருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன. தேவர்கள் நடுங்கினர். அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம் செய்ய வேண்டினர். நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன. பின்பு சிவபெருமானைச் சமாதானம் செய்தார். “உடலை விட்ட தாட்சாயணி, பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக, பார்வதி என்ற பெயரில் அவதரிப்பாள் என்றும், அங்கு அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்என்றும் திருமால் கூறினார். இதன்படி, கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது.