Tag Archives: பசுபதி கோயில்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதி கோயில்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதி கோயில், அய்யம்பேட்டை, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 97903 42581, 94436 50920

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள்

தாயார்

பெருந்தேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பசுபதிகோவில்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

இராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். இராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு இராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், இராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே இராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர். பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜப் பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்.

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், புள்ளமங்கை

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், புள்ளமங்கை, தஞ்சை மாவட்டம்.
திருப்புள்ளமங்கை தற்போது பசுபதிகோவில் என்று வழங்குகிறது.

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதி கோயில், தஞ்சை மாவட்டம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் ஆலந்துறை நாதர், பசுபதி நாதர், பிரம்புரீசுவரர்
அம்மன் அல்லியங்கோதை, சௌந்தரநாயகி
தீர்த்தம் காவிரி, சிவதீர்த்தங்கள்
புராணப் பெயர் புள்ள மங்கை
ஊர் பசுபதி கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

குடமுருட்டி ஆற்றின் கரையில் இந்த ஆலயம் உள்ளது. ஊர்ப்பெயர் பண்டைநாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. ஆல மரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறைத் தலம் ஆதலின் ஆலந்துறை என்று பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. சம்பந்தர் தன் பதிகத்தின் எல்லா பாடலிலும் புள்ளமங்கை என்ற பெயரையும், ஆலந்துறையில் உறையும் இறைவன் என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டுக்களில் ஆலந்துறை மகாதேவர் கோயில்என்று இக்கோயில் குறிக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்கப்படுகிறது.

இத்தலத்திற்கு அருகிலுள்ள பாடல் பெற்ற தலமான திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட ஏழு தலங்களுள் இது 5வது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (இத்தலம்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியர்கள் மட்டுமன்றி, கேட்ட வரமருளும் தேவலோகப் பசுவான காமதேனு நாள் தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு. ஆகையால் இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது முதன் முதலில் வெளிவந்த ஆலகால நஞ்சினை எடுத்துச் சிவபெருமான் உண்டு தன் கழுத்தில் அடக்கிய ஊர் இத்தலம் என்பதால் இதலத்திற்கு ஆலந்துறை என்ற பெயரும், இறைவன் ஆலந்துறைநாதர் என்றும் கூட அழைக்கப்படுகிறார்.