Tag Archives: நங்கநல்லூர்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், நங்கநல்லூர்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் நங்கநல்லூர், சென்னை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து, அவர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புனிதப் பணியினை செய்து வந்தார் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். நாளடைவில் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்று செய்ய எண்ணம் கொண்டார். அதன்படி பக்தர்களின் கைங்கரியத்தால் ஐயப்பன் விக்ரகம் செய்யப்பட்டு பல வருடங்களாக குருசாமியின் இல்லத்திலேயே ஐயப்ப பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வந்தன. அழகான ரூபத்தில் அமைந்த ஐயப்பனுக்கோ தான் ஒரு தனிக் கோயிலில் அமர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க, பலரது எண்ணத்திலும் அது எதிரொலிக்க, தனிக் கோயில் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் வேறு பகுதியில் இடம் பார்த்து கோயில் கட்ட ஆரம்பிக்க, என்ன காரணத்தினாலோ அது தொடரமுடியாமல் போனது. உடனே குருசாமி சபரிமலையிலுள்ள மேல்சாந்தியை சந்தித்து விவரம் கூற பிறகு தேவபிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. தேவபிரச்னத்தில் ஐயப்பனே வந்து தாம் கோயில் கொள்ள விரும்பும் இடம் பிருங்கி முனிவர் தவமிருந்த சேத்திரம், அகத்தியர் வலம் வந்த பூமியென்றெல்லாம் கூற, அப்படி பிரச்சனத்தின் மூலமாக ஐயப்பன் வந்து அமர்ந்த இடம்தான் நங்கநல்லூர்.

தர்மலிங்கேஸ்வரர் உடனுறை சர்வமங்களா தேவி திருக்கோயில், நங்கநல்லூர்

அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் உடனுறை சர்வமங்களா தேவி திருக்கோயில், நங்கநல்லூர், திருவள்ளூர்(சென்னை) மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தர்மலிங்கேஸ்வரர் (தன்மீஸ்வரர், வீரசிங்கர்)
அம்மன் சர்வமங்களா தேவி
தல விருட்சம் வில்வம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தன்மீச்வரம்
ஊர் நங்கநல்லூர்
மாவட்டம் திருவள்ளூர்(சென்னை)
மாநிலம் தமிழ்நாடு

சோழ அரசன் ராஜராஜன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது காரியாதித்த சோழன் குறுநில மன்னனாக இருந்தான். இவன் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதி கோயில்களில் உழவாரப்பணி செய்தான். ஒரு முறை இவன் தன்மீச்வரம் வந்தபோது அங்கு பசுமையாக வயல்வெளிகள் காட்சி தந்ததை பார்த்து அன்றிரவு அங்கேயே தங்கினான். இரவு முடிந்து பகல் விடிந்தும் அரசன் எழுந்திருக்காததை கண்ட வீரர்கள், அவனை எழுப்பவும் பயந்தனர். இந்த நேரத்தில் கோயில் மணி ஓசை மிக சத்தமாக கேட்டது. மன்னன் விழித்துக் கொண்டான். ஓசை வந்த திசை நோக்கி சென்ற சோழ மன்னனுக்கு இலிங்க வடிவில் காட்சி தந்தார் சிவன். இந்த தரிசனத்தினால் மன்னன் மகிழ்ந்தாலும், கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பது கண்டு வருந்தினான். அத்துடன் தன்னை எழுப்பிய ஈசனின் ஆலயத்தில் தினமும் கோயில் மணியோசை கேட்க வேண்டும் என நினைத்தான்.