Tag Archives: பெருஞ்சேரி

அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில், பெருஞ்சேரி

அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில், பெருஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வாகீஸ்வரர்

தாயார்

சுவாதந்தர நாயகி

தல விருட்சம்

பன்னீர் மரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பெருஞ்சேரி

மாவட்டம்

நாகப்பட்டினம்

மாநிலம்

தமிழ்நாடு

பார்வதியின் தந்தையான தக்கன் சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகத்தை தொடங்கினார். இந்த யாகத்திற்கு தேவர்களும், பிரம்மனும் வந்தனர். யாகம் தொடங்கியது. அழைக்காத இந்த யாகத்திற்கு பார்வதி தேவி சென்று அவமானப்பட்டாள். இதைக் கண்ட சிவபெருமான் கோபப்பட்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். தக்கனை அழிக்க வீரபத்திரனை தோற்றுவித்தார். தக்கனிடம் சென்ற வீரபத்திரன், “தக்கனே! வேள்விக்குத் தலைவராகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு. ஏன் வீணாக அழிகிறாய்?” எனக் கேட்டும் தக்கன் உடன்படவில்லை. சிவபெருமானை மேலும் இகழ்ந்தான். உக்கிர மூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தை அழித்ததுடன் யாகத்தில் பங்கேற்ற தேவர்கள், நவக்கிரக நாயகர்கள் மற்றும் பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை கடுமையாக தண்டித்தார். அத்துடன் அருகே இருந்த ஆட்டின் தலையை எடுத்து தக்கன் உடலில் பொருத்தினார். வீரபத்திரனால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி தன் நிலையைக் கண்டு வேதனைப்பட்டாள். கணவரிடம் கூறிப் புலம்பினாள். தவத்தால் எதையும் அடையலாம் என்று பிரம்மா கூற, சரஸ்வதி பெருஞ்சேரிக்கு வந்தாள். இங்கு கோயில் கொண்டிருக்கும் வாகீஸ்வர சுவாமியை நோக்கிப் பல ஆண்டுகள் தவமிருந்தாள். சரஸ்வதி தன் முன் தோன்றிய சிவபெருமானிடம், எல்லோருடைய நாவிலும் வீற்றிருந்து வாக்கு விருத்தியளிக்கும் பேற்றை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டி வரம் பெற்றாள்.