Tag Archives: ஆண்டிப்பட்டி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிப்பட்டி

அருள்மிகு , தேனி மாவட்டம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்.

+91- 99527 66408, 94435 01421, 94434 47458

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில் பல சிவத்தலங்களை தரிசித்திருந்தாலும், மதுரை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர். எனவே இவர்கள் நினைத்த போதெல்லாம் அன்னை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க விரும்பினர்.
பாண்டியர்களின் தலை நகராக மதுரை விளங்கியதால், இரவும் பகலும் மக்கள் நடமாட்டத்துடன் இருந்தது. இதனால் சித்தர்களால் மதுரையில் அமைதியாகத் தங்கி மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலவில்லை. எனவே இவர்கள் மதுரைக்கு அருகில் அமைதியான சூழ்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இருப்பதை அறிந்தனர். உடனே அவர்கள் ஆண்டிகள் கோலத்தில் அங்கு சென்று தங்கி, தியானம் செய்வது, சிவபூஜை செய்வது என்ற சிவத் தொண்டில் ஈடுபட்டனர். அத்துடன் தாங்கள் விரும்பிய நேரத்தில் எல்லாம் மதுரைக்கு வந்துமீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வந்தனர். ஆண்டிகளாக சித்தர்கள் இங்கு வந்து தங்கியதால், இத்தலத்திற்கு ஆண்டிப்பட்டி என்ற பெயர் ஏற்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. மதுரை மீனாட்சி கோயில் போல, மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார். இவரது ஜீவ சமாதி இங்குள்ளது. இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தலவிருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி-625 512, தேனி மாவட்டம்.
*****************************************************************************************

+91 90429 60299, 92451 91981 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை சாத்துவதில்லை.

மூலவர்: – காளியம்மன்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆண்டிப்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்டிப்பட்டி , முட்புதர் சூழ்ந்த பகுதியாக இருந்தது. ஊருக்கு நடுவில் ஒரு திரிசூலத்தை வைத்து, பக்தர்கள் காளியம்மனாக வழிபாடு செய்து வந்தனர். இங்கு வசித்த பேரிநாயக்கர் என்ற முதியவரின் கனவில் தோன்றிய காளி,”கேரளாவில் சோட்டானிக்கரையிலிருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட எனது சிலை, வடமலை நாயக்கன் பட்டியில் வைகை ஆற்றுமணலில் புதைந்து கிடக்கிறது. பதினாறு அடி தோண்டினால், என் சிலை கிடைக்கும். அதை எடுத்து வந்து ஆலயம் அமைத்து வழிபாடு செய்யுங்கள்என்றாள். மறுநாள் பேரிநாயக்கரின் தலைமையில் ஊர்மக்கள் சென்று அம்பாள் சிலையை எடுத்து வந்து ஆலயம் அமைத்தனர். அவளுக்கு காளிஎன்று பெயர் சூட்டினர்.

நீதியின் காவல்தெய்வம் :

கருவறையில் நீதியை நிலைநாட்டுபவளாக காளி வீற்றிருக்கிறாள். ஐந்து தலைநாகம் இவளுக்கு குடைபிடித்துள்ளது. வலது காலை மடித்தும், இடது காலை தரையில் ஊன்றியும் உள்ள இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஏந்தியிருக்கிறாள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுபவளாக இருக்கும் இவளை வழிபட்ட பின்னரே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வங்களுக்குத் திருவிழா நடக்கும். தனக்கு குறை நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளும் இவள், தன் பக்தர்களுக்கு யாராவது தீங்கு எண்ணினால் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.