Tag Archives: திருக்கருகாவூர்

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 97891 60819,04374 -273 502, 273 423 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முல்லைவனநாதர்
அம்மன் கருகாத்தநாயகி
தல விருட்சம் முல்லை
தீர்த்தம் பால்குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கருகாவூர், திருக்களாவூர்
ஊர் திருக்கருகாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

ஒரு காலத்தில் இந்த இடம் முல்லைக் காடாக இருந்தது. நித்துருவர், வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாத குறையினால் முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கி, குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர். இதனையடுத்து வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் இடுப்பு வலி வந்துவிட்டது. அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு பிச்சையிட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி, குழந்தையாகக் கொடுத்தாள். பெருமானின் கட்டளைப்படி காமதேனுவே தன் பாலை சுரந்து அளித்தது. பின்னர் வந்த நிருத்துவர் இவ்வரிய நிகழ்ச்சியினை அறிந்து மகிழ்வெய்தி இத்தலத்து வசிக்கும் மற்றும் இத்தலத்து பெருமானையும், பெருமாட்டியையும் வேண்டி நிற்கும் கருவுற்ற பெண்களுக்கு எந்த இன்னலும் இல்லாமல் குழந்தைப்பேறு ஏற்பட வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அவ்வாரே ஈசனையும், அம்பிகையையும் வேண்டும் பெண்களுக்கு எந்த கருக்காலத்து இன்னல்களும் வருவதில்லை என்று தலவரலாறு கூறுகிறது.

படைப்புத் தொழிலினை மேற்கொண்டதால், பிரம்மன் ஆணவம் கொள்ள, அதனால் அது கைகூடாது போயிற்று . அதனால் பிரம்மன் இத்தலத்திற்கு வந்து, தென்மேற்கு மூலையில் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை நிறுவி, முல்லைவனநாதரைப் பூஜித்து தன் தொழில் மீண்டும் கைகூடப் பெற்றான்.

சுவர்ணாகரன் என்னும் வைசியன் தான் செய்த தீ வினையால் பேயுருக் கொண்டான்.