Tag Archives: சேங்கனூர்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர், திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-2457 459, 93459 82373 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்தியகிரீஸ்வரர்
அம்மன் சகிதேவியம்மை
தல விருட்சம் ஆத்தி
தீர்த்தம் மண்ணியாறு, சத்திய புஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சேய்ஞலூர், திருச்சேய்ஞலூர்
ஊர் சேங்கனூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

ஒரு காலத்தில் வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் பலப்பரீட்சை ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையை இறுகிப்பிடிக்க, வாயுதேவன் பெருங்காற்றால் மலையை அசைக்க முயன்றான். இதில் ஒரு சிறு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இதனால் இத்தலம் சத்தியகிரிஎனப்பட்டது. முருகக்கடவுள் பூஜித்ததால் சேய்ஞலூர்என்ற பெயரும் உண்டு.

இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தார். தாயன்புடன் இவன் மேய்த்ததால் அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி, கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,”என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்எனக் கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர்ஆக்கினார். 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். இத்தலத்தில் இவர் வேறெங்கும் காணத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். அருகிலுள்ள திருவாய்ப்பாடி இவரது முக்தி பெற்ற தலமாக போற்றப்படுகிறது. சிவன் காட்சி கொடுத்ததால், சண்டேஸ்வரரே பிறை, சடை, குண்டலம், கங்கையுடன் காட்சி தருகிறார். சிபிச்சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார். சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.