Tag Archives: ஏரிக்குப்பம்

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம்

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், களம்பூர் போஸ்ட், திருவண்ணாமலை மாவட்டம்.

+91 4173 – 229 273, 93602 23428

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 6 – இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எந்திர சனீஸ்வரர்
தீர்த்தம் பாஸ்கர தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஏரிக்குப்பம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். வேலூர் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோயில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது.

மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது. இலிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ஷட்கோண எந்திரம்உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்சர மந்திரம், லட்சுமிகடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.