Tag Archives: கங்கை கொண்ட சோழபுரம்

பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

+91 97513 41108

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் பிரகதீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் பின்னை, வன்னி
தீர்த்தம் சிம்மக்கிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். தன் தந்தையைப்போல மிகச்சிறப்புடன் ஆண்டவன் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012 – 1044) கங்கைகொண்டான், பண்டிதசோழன் முதலிய பட்டப் பெயர்களையுடையவன். இவனுடைய மகள் அம்மங்காதேவி. லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பி போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன், சோழநாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணி; முயன்றான். இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கைநீர் கொண்டுவர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகும். அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம். முதலாம் இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர் தலைநகராகத் திகழ்ந்தது.