Tag Archives: திருச்சி

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பக் குளம் அருகில், திருச்சி, திருச்சி மாவட்டம்.

+91 431 270 4621 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நந்தீஸ்வரர்
தலவிருட்சம் வில்வம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர் திரிசிராமலை
ஊர் திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. இந்தக் கோயிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோயிலாகும். இந்தக் கோயில் பற்றி ஒரு சிலரது கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இது தாயுமான சுவாமியின் அதிகார நந்தியாக இருந்தது. காலப்போக்கில் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதால், நந்தி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது. அதுவே தனிக்கோயில் போலத் தோற்றமளிக்கிறது என்கின்றனர். தற்போது நந்திக்கு மட்டுமே பூஜைகள் செய்யப்படுகிறது. இங்குள்ள நந்தி ஏழு அடி உயரமும், பத்து அடி நீளமும், 16 அடி சுற்றளவும் கொண்டது. பிரதோஷ காலங்களில் சந்தனக்காப்பு உட்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்கள் துயர் துடைக்க இங்கு வருகின்றனர். நந்திக்கு பின்புறம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 அடி உயரத்தில் கல் கொடிமரம் உள்ளது. இதன் மேலும் ஒரு நந்தி சிலை இருக்கிறது. நந்திக்கு பூஜையை தொடர்ந்து இந்த கொடி மரத்துக்கும் பூஜை செய்யப்படுகிறது. கொடிமரத்தின் அடியில் செவ்வந்திநாதர் என்றழைக்கப்படும் செவ்வந்தி விநாயகர் சன்னதி மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். அருகில் வீரஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் இருக்கும் நந்திக்கு பிரதோஷம் நடக்கும். ஆனால், சிவன் இல்லாமல் நந்தி மட்டும் தனித்திருக்கும் இக்கோயிலிலும் பிரதோஷம் சிறப்பாக நடை பெறுகிறது.

அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி

அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி, திருச்சி மாவட்டம்.

+91- 431 – 270 4621, 271 0484, 270 0971

காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். உச்சிப்பிள்ளையார் கோயில் காலை 6 – இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாயுமானவர்
அம்மன் மட்டுவார்குழலி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை காரணம், காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிரபுரம், மலைக்கோட்டை
ஊர் திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடைய தங்களில் யார் பெரியவர் எனப் போட்டி வந்தது. ஆதிசேஷனை மீறி, கைலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். அப்போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இம்மலையில், மூன்று தலைகளுடைய திரிசிரன்என்னும் அசுரன், சிவனை வேண்டித் தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.

அசுரனின் பெயராலேயே, “திரிசிரநாதர்என்று பெயர் பெற்றார். தலம் திரிச்சிராமலைஎன்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.