Tag Archives: தருமபுரம்

அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்

அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், காரைக்கால், புதுச்சேரி.

+91- 4368 – 226 616 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் யாழ்மூரிநாதர்
அம்மன் தேனாமிர்தவல்லி
தல விருட்சம் வாழை
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் மகுடாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தருமபுரம்
ஊர் தருமபுரம்
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

சிவன், மார்க்கண்டேயரை பிடிக்க வந்த எமதர்மனை, திருக்கடையூரில் சம்காரம் செய்து அவரது பதவியை பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். அதேசமயம் எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டான். எமனுக்கு அருள் செய்வதற்காக சிவன், பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவர இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி எமன் சிவத்தல யாத்திரை சென்றான். இத்தலம் வந்த எமதர்மன் தீர்த்தம் உண்டாக்கி, தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். எமன் தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு அருள வேண்டும் என வேண்டவே, சிவன் இங்கே தங்கினார்.

எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் அவருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் இசைக்கும் திறமை பெற்றிருந்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார்.
அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது, சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.