Tag Archives: திருவிசநல்லூர்

அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்

அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-200 0679, 94447 47142 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர்
அம்மன் சவுந்தரநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் 8 தீர்த்தங்கள் ஜடாயு தீர்த்தம் முக்கியமானது.
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பண்டாரவாடை, திருவியலூர்
ஊர் திருவிசநல்லூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டித் தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர்ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்கத் திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன.

ஒரு காலத்தில், ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம்,”அழைப்பது யார்?”எனக் கேட்க, நந்தி திரும்பி பார்த்தது. (இத்தலத்தில் நந்திசிலை திரும்பிப்பார்த்த நிலையிலேயே உள்ளது)
அவன் அப்படி அழைத்தது பிரதோஷ தினம்ஆகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

இத்தலம் நான்கு யுகம் கண்ட தலமாகும் எனப் புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர், திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர், துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர், கலியுகத்தில் சிவயோகிநாதர் என இறைவன் வணங்கப்படுகிறார். திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது. சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும், இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும், அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.