Tag Archives: வி.மேட்டுப்பட்டி

அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோயில், வி.மேட்டுப்பட்டி

அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோயில், வி.மேட்டுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்,

ஒரு பக்தருக்கு வாழ்க்கையில் தீராத கஷ்டம். ஜோதிடரை பார்க்கும் நேரமெல்லாம், ஏழரைச் சனி என சொல்லிக்கொண்டே இருப்பார். சனீஸ்வரருக்கு எள் தீபத்தை வாரம் தவறாமல் ஏற்றினார். இருந்தாலும் கஷ்டம் தீரவில்லை. சனீஸ்வரன் விரட்டி விரட்டி அடித்தார். உணவுக்குக் கூட சிரமமாகிவிட்டது. அந்த பக்தர் கதிர் நரசிங்கர் குடியிருக்கும் கோயிலுக்குள் புகுந்து விட்டார். பெருமாளின் பாதுகாப்பில் இருந்ததால், சனீஸ்வரரால் உள்ளே நுழைய முடியவில்லை.

அவர் பெருமாளைப்பணிந்து, “அந்த பக்தரை வெளியே அனுப்புங்கள். அவர் அனுபவிக்க வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது. எனது கடமையை தடுக்காதீர்கள்” என வேண்டிக்கொண்டார். பெருமாளும் சனீஸ்வரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் “என்னை சரணடைந்த பக்தனுக்கு அதிக அளவில் துன்பம் கொடுக்க கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணவு வகையில் சிரமம் ஏற்படக்கூடாது“ என்றும் நிபந்தனை விதித்தார். அத்துடன், சனி திசை உள்ள பக்தர்கள் யாராக இருந்தாலும், இந்தக்கோயிலுக்குள் வந்துவிட்டால் அவரது சிரமங்களைக் குறைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

தலவிருட்சம்: சந்தனமரம்.

தீர்த்தம்:

பிரம்மதீர்த்தம். இந்த தீர்த்தத்தை தவளை படா தீர்த்தம் என்கிறார்கள். பாழ்பட்டு கிடக்கும் இதில் மீன்களோ, தவளைகளோ இன்று வரை வசித்ததில்லை.

இங்கு நம்மாழ்வார் அருள்பாலிப்பது சிறப்பு. நின்ற கோலத்தில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி புதிய சிலைகள் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

குழந்தை இல்லாத பெண்கள் இங்கு வேண்டி கொண்டால் மகப்பேறு நிச்சயம். கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால், பெருமாளின் மீது வைக்கும் சந்தனத்தை மாட்டுத்தீவனத்தில் கலந்து வைக்கிறார்கள். அவற்றிற்கு நோய் நீங்கி, பால் ஏராளமாக சுரப்பதாக நம்பிக்கை.

வழிகாட்டி:

திண்டுக்கல்லில் இருந்து சிலுவத்துப்பட்டி வழியாக 19கி.மீ. தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு 1சி, 2ஏ ஆகிய பஸ்கள் செல்கின்றன