Tag Archives: பெரியபாளையம்

ஐமுக்தீஸ்வரர் ஆலயம், பெரியபாளையம்

அருள்மிகு ஐமுக்தீஸ்வரர் ஆலயம், பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம்.

+044-27927824, 9444086357

காலை 6:00 – 11:00 மாலை 4:00 – 8:00

சென்னையில் இருந்து பவானி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் முன்பாக,

பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது அன்னபூர்ணாம்பா சமேத ஐமுக்தீஸ்வரர் ஆலயம். இந்தத் தலத்து இறைவனைப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. பஞ்ச பூதங்கள் தங்கள் சாபம் நீங்குவதற்காக வணங்கித் துதித்துள்ளனர். புண்ணிய நதியாம் ஆரணி நதிக்கு அந்தப் பக்கம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்; இந்தப் பக்கம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில். ஆலயம் சிறியது என்றும் சொல்ல முடியாது; பெரியது என்றும் சொல்ல முடியாது. ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரங்கள்,

ஏராளமான பரிவார தெய்வங்கள் என்று ஐமுக்தீஸ்வரர் ஆலயம் அருமையாக காட்சி தருகிறது. மேற்குப் பார்த்த சிவத் தலம். வடக்கு நோக்கி ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆயினும், ஆலயத்துக்கான பிரதான நுழைவாயில் கிழக்குப் பக்கம்தான் இருக்கிறது. தவிர, வடக்குப் பக்கமும் ஒரு வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி விசேட நாட்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வாயிலை மூடியே வைத்திருக்கிறார்கள்.

ஐமுக்தீஸ்வரர் இலிங்க வடிவத்தை மாபெரும் தவமுனி வால்மீகி முனிவர் நிறுவி வணங்கியதாகத் தல புராணம் கூறுகிறது. இந்திய தேசமெங்கும் சென்று இறை வழிபாடு செய்து வந்த வால்மீகி முனிவர், ஒரு முறை இந்த ஆரணி நதிக் கரைக்கும் வந்தார். பொங்கிப் பிரவாகிக்கும் நதியின் அழகிலும், இதன் கரை அமைந்துள்ள அமைப்பிலும் மயங்கிய முனிவர், இங்கேயே சில காலம் தங்கி, சிவனை நினைந்து தவம் புரிந்தார். மாமுனியின் கடும் தவத்துக்கு இரங்கிய எம்பெருமானார் பார்வதிதேவியுடன் அவருக்குக் காட்சி தந்து அருளினார். வால்மீகி முனிவர் மிக மகிழ்ந்தார். ”யாம் பெற்ற இந்த இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் இறைவாஎனவே, தாங்கள் இங்கேயே உறைய வேண்டும்என்று கோரிக்கை வைத்தார். எம்பெருமானும் மனம் கனிந்தார். இலிங்க சொரூபமாக இதே தலத்தில் குடி கொண்டார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பி, தினமும் மூன்று காலம் பூஜைகள் நடத்தி வழிபட்டார் வால்மீகி. முனிவர் தங்கி இருந்த இந்த இடத்துக்கு, ‘வால்மீகி ஆசிரமம்என்ற பெயரும் இருப்பதாகத் தல புராணம் சொல்கிறது. தவிர, பஞ்சபூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் அதிபதியான தேவதைகள் தங்களது சாபம் தீர்வதற்காக இந்த இறைவனிடம் வந்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து பேருக்கும் சாபம் நீக்கி, முக்தி அளித்ததால்தான் ஐமுக்தீஸ்வரர்என இறைவன் அழைக்கப்பட்டதாக ஊரார் கூறுகின்றனர்.