Tag Archives: திருக்கோழம்பியம்

அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம்

அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4364-232 005 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோகிலேஸ்வரர், கோழம்ப நாதர்
அம்மன் சவுந்தரநாயகி
தல விருட்சம் வில்வம், முல்லைக்கொடி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோழம்பம்
ஊர் திருக்கோழம்பியம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர, பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள். இதனால் பார்வதியைப் பசுவாக பூமியில் பிறக்கும்படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி இத்தலம் வந்து சிவனை பூஜித்து, மீண்டும் தன் கணவனை அடைந்தாள். பெருமாளுக்கும் பிரம்மனுக்கும் சிவனின் அடிமுடி காண்பதில் பிரச்னை ஏற்பட்டது.

பிரம்மன் முடியை காண்பதற்காகச் சென்று, முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொன்னார். இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார்.

சந்தன் என்னும் வித்யாதரன், தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர்என அழைக்கப்பட்டார். இந்திரன் தனக்கு அகலிகை, கவுதமரின் சாபம் நீங்க, பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்.