Tag Archives: காளையார் கோவில்

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில், திருக்கானப்பேர், சிவகங்கை மாவட்டம்.

+91- 4575- 232 516, 94862 12371 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொர்ணகாளீஸ்வரர்
அம்மன் சொர்ணவல்லி
தல விருட்சம் கொக்கு மந்தாரை
தீர்த்தம் கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கானப்பேர்
ஊர் காளையார் கோவில்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், சுந்தரர்

ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். “இறைவா! உன்னைக் காண முடியவில்லையேஎன வருந்திப் பாடினார். தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச்சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் இலிங்கம் இல்லையென்றும், அவ்வழியே நடந்து வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் காளையார்கோவில்ஆயிற்று.

இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது. மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒருமுறை ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால், அந்த யானை தன் தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடுஎன்று பெயர். இராமபிரான் இராவணனை அழித்த பிரம்மகத்தி தோஷம் நீங்க, இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. கோயிலுக்குள் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. தல விருட்சம் கொக்கு மந்தாரை.