Tag Archives: மாடம்பாக்கம்

தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.

+91- 44- 2228 0424, 93826 77442, 99411 49916

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தேனுபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் தேனுகாம்பாள்
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கபில தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மாடையம்பதி
ஊர் மாடம்பாக்கம்சென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு இலிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, “மணலில் இலிங்கத்தை வைக்க மனமில்லைஎன்றார். சிவன் அவரிடம், “கையில் இலிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்லஎனச் சொல்லி அவரைப் பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார்.

பசுவாக பிறந்த கபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்திபெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, “தேனுபுரீஸ்வரர்எனப்பட்டார். “தேனுஎன்றால் பசு.” இவருக்கு உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்என்றும் பெயர் உண்டு.

கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இலிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. இலிங்கத்தைச் சுற்றி மண்டபம் போன்ற அமைப்பில் காப்பும், நாகாபரணமும் அணிவித்து உள்ளனர். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது விசேஷம். அம்பிகை தேனுகாம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் இலிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது.