Tag Archives: தாராபுரம்

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம், ஈரோடு மாவட்டம்.

+91 4258 220 749, 98423 70761

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காடு ஹனுமந்தராய சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாராபுரம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும் 732 ஆஞ்சநேயர் கோயில்களைக் கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் கோயில். அந்தக் கோயில் கட்டிய இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு ஹனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. 1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க காடு ஹனுமந்தராய சுவாமியை வழிபடுமாறு கூறினர். கலெக்டரும் அவ்வாறே செய்ய நோய் நிவர்த்தியானது. இதற்கு நன்றிக்கடனாக கோயிலில் கர்ப்பக்கிரகத்தை பெரிதாகக் கட்டினார். கோபுரம் கட்ட முயன்ற போது, பக்தர் ஒருவரின் கனவில் சுவாமி தோன்றி, கோபுரம் தேவையில்லை என்று கூறியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மத்வாச்சாரியரின் நூல்களுக்கு விளக்கவுரை (டீகா) எழுதியவர் ஜெயதீர்த்த சுவாமிகள். இதனால் இவருக்கு டீகாசார்யா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவருடைய மூல பிருந்தாவனம் மைசூரு அருகிலுள்ள மல்கேடாவில் உள்ளது. இங்கிருந்து மிருத்திகை (புனிதமண்) கொண்டு வந்து, இந்தக் கோயிலிலுள்ள இலட்சுமி நரசிம்மன் சந்நிதியில் இவருக்கு பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்வ மத மடாதிபதிகளில் முக்கியமானவரான இராகவேந்திர சுவாமிகளின் மந்திராலயத்தில் இருந்து மிருத்திகை கொண்டு வரபட்டடு இராமர் சந்நிதியில் அவரது பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிருந்தாவனங்களில் அமர்ந்து வழிபடுவதன் மூலம் ஞானசக்தியும், கல்வியும் மேம்படும் என்பது நம்பிக்கை.

அகத்தீசுவரர் கோயில், தாராபுரம்

அருள்மிகு அகத்தீசுவரர் கோயில், தாராபுரம், திருப்பூர் மாவட்டம்.

98420 16848

காலை 6.30 முதல் பகல் 11.30 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

நாம் எல்லாவற்றிலுமே வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், பல முட்டுக்கட்டைகள் நம் இலக்கை அடையவிடாது தடுக்கின்றன. இவற்றையெல்லாம் தகற்துத் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளுகிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு அருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் இலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது, மணலில் ஒரு இலிங்கம் வடித்தார். அகத்திஸ்தியர் வடித்த இலிங்கம் என்பதால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது. இந்த ஊரே தற்போதைய தாராபுரம்.


பஞ்சபாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திருமலை சுவாமி சித்தர் வழிபட்டுள்ளார். ராமேசுவரம், கும்பகோணம், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல் இலிங்கங்களுக்கு அபிசேகம் நடப்பதில்லை. ஆனால், இங்கு தினமும் அபிசேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த இலிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள காக்கா பொன்என்னும் துகள் ஒளிர்வதைக் காணலாம். இந்த இலிங்கத்தை இங்கு நிறுவுமுன், இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகத்தியர், இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே இலிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகத்தீசுவரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித்ததும் தாமதமின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.