Tag Archives: திருக்கண்டலம்

அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்

அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.

+91-44 – 2762 9144. +91- 99412 22814 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவாநந்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் ஆனந்தவல்லி
தல விருட்சம் கள்ளி
தீர்த்தம் நந்தி தீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கள்ளில்
ஊர் திருக்கண்டலம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு பகுதி தாழ்வாகியது. இதனால் பூமி சமநிலை இழக்கவே சிவன், அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவனது திருமணத்தை தானும் காணவேண்டுமென விரும்பிய அகத்தியர் அவரிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்காட்சியை தரிசிக்கும்படி வரம் பெற்றார். தென்பகுதியை நோக்கி வந்த அகத்தியர், திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கு தங்கியிருந்தார். அன்று இரவு அவரது கனவில் சிவன் தோன்றி, இத்தலத்தையும், தீர்த்தத்தையும் குறிப்பால் உணர்த்தி, சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். பின் அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளியதோடு, முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். அவரது தரிசனத்தால் அகத்தியர் சிவ ஆனந்தம் அடைந்தார். “தனக்கு அருள்புரிந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும்என சிவனிடம் அகத்தியர் வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி சிவாநந்தீஸ்வரர்என்ற பெயரும் பெற்றார்.

பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன், பார்வதியுடன் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற பிருகு, சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. “என்னதான் இருந்தாலும் சிவன்தானே பெரியவர்என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.