Tag Archives: ஆங்கரை

மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில், ஆங்கரை

அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில், ஆங்கரை, லால்குடி, திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மருதாந்தநாதேஸ்வரர்
அம்மன் சுந்தர காஞ்சனி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆங்கரை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

மருதாந்தன் என்பவன் சுகோலர் என்ற முனிவரின் மகன். முனிவரின் மனைவி முறைகெட்டு நடந்தாள். எனவே முனிவர் அவளை ஒதுக்கிவிட்டார். விலகிப்போன மனைவியோ பாவத்தொழிலை செய்துவந்தாள். மருதாந்தன் வாலிபனானான். அந்நாட்டு இளவரசனின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. இளவரசன் பெண்பித்தனாக இருந்தான். அவனோடு சேர்ந்த மருதாந்தனும் அவனைப்போலவே ஆனான். ஒருமுறை அவர்கள் தங்களைவிட வயதில் முதிர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு சென்றனர். அந்த பெண்ணிற்கோ இளவரசனுடன் வந்திருந்த வாலிபனைப் பார்த்ததும் சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகே அந்தப் பெண் வந்த வாலிபன் தனது மகன் என்பதை தெரிந்துகொண்டாள். அந்த வாலிபனோ எப்பேர்ப்பட்ட பாவத்தை செய்துவிட்டோம் என புலம்பித்தீர்த்தான். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. காட்டில் போய் தியானத்தில் அமர்ந்துவிட்டான். இறைவனைக் காணாதவரை எதுவுமே சாப்பிடுவதில்லை என்று உறுதியெடுத்தான். அறியாமல் பெரும்பிழை செய்த அந்த வாலிபனின் முன் சிவபெருமான் தோன்றினார். அவன் செய்த பிழைக்கு மன்னிப்பு வழங்கினார். “எந்த ஒரு வாலிபனும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவனது தாயாகவே கருதவேண்டும். இதை உலகிற்கு உணர்த்தவே இந்த கொடும் நாடகம் ஆடினேன். கலியுகத்தில் இதுபோன்ற கொடுமைகள் நிகழலாம். அவர்கள் எல்லாம் திருந்தவே இவ்வாறு செய்தேன்என்றார். இருப்பினும் அந்த வாலிபனின் மனது படாதபாடு பட்டது. இந்த தோஷத்திற்கு விமோசனம் என்ன என கேட்டான். அதற்கு இறைவன் தனக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டால் பாவம் தீரும் என்றார். அதன்பின் தனது சொந்த உழைப்பில் மருதாந்தன் சிவனுக்கு கோயில் அமைத்தான். அவனுக்கு அம்பாள் ஆறுதல் கூறினாள்.