Tag Archives: இசையனூர்

அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர்

அருள்மிகு வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், இசையனூர், ஆற்காடு தாலுக்கா, வேலூர் மாவட்டம்.

கலியுகத்தில் முதற்பகுதியில் இருந்தவர் ஸ்யமந்தகர் எனும் மகரிஷி. அவரது மனைவி மானஸாதேவி. கண்ணனிடம் பரமபக்தி கொண்டவர். ஸ்ரீகிருஷ்ணனை இம்மகரிஷியும், அவரது மனைவியும் ஆராதிக்காமல் ஒருதுளி நீரும் பருகுவதில்லை. ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்து, தங்கள் வாழ்நாளைக் கழித்து வந்தனர். எங்கெல்லாம் தனது அவதார காலத்தில் கண்ணன் லீலைகள் புரிந்தானோ, அந்தப் புண்ணிய சேத்திரங்கள் அனைத்தையும் மனைவியுடன் சென்று தரிசிப்பதில் ஆனந்தம் அடைந்து வந்தார் ஸ்யமந்தகர்.

கோகுலம், ஆயர்பாடி, மதுரா, பிருந்தாவனம், துவாரகை என்று எந்த இடங்களில் எல்லாம் கண்ணனின் திருவடிகள் பட்டிருக்குமோ அங்கெல்லாம் சென்று தரையிலும், மண்ணிலும் விழுந்து புரள்வார். கண்ணனின் திருவடிகள் எங்காவது பட்டிருக்கும்; அவ்விதம் அந்தப் பிரபுவின் திருவடிகள் பட்ட இடம் தனது உடலில் படவேண்டும் என்று புரண்டு வருவது வழக்கம். இந்த பிரம்மரிஷியின் ஸ்ரீகிருஷ்ண பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.