Tag Archives: ஆசை நீங்க

ஆசை நீங்க

ஆசை நீங்க

ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை. ஆனால் மக்கள் ஆசையை விட்டுவிட மிகத்தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஆசை நிறைவேறாவிட்டால் பல துன்பங்கள் நேர்கிறது. உங்கள் வாழ்வின் ஒரே துன்பம், வாழ்க்கை நீங்கள் நினைத்தவிதமாக நடக்கவில்லை என்பதுதான். நிறைவேறாத ஆசையால்தான் மனிதனுக்கு துன்பம் நேர்கிறது. 100 விஷயங்கள் ஆசைப்பட்டவிதமாக நடந்து, ஒரு விஷயம் உங்கள் ஆசைப்படி நடக்காமல் போனாலும் அது துன்பமாய் இருக்கிறது. எனவே, ஆசையை விட்டுவிட வேண்டுமென்று உங்களுக்கு போதித்துவிட்டார்கள். கவனித்துப் பார்த்தால், உங்கள் உயிருக்கு அடிப்படையே ஆசைதான் என்பதை அறிவீர்கள். ஆனால் ஆசையை விட்டுவிட வேண்டுமென்று உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஆசையை விடவேண்டும் என்பதே ஒரு ஆசைதானே? இது எப்போதுமே நிறைவேறாத ஆசை. இந்த உயிர் நடைபெறுவதற்கு அடிப்படையே ஆசைதான். ஒரு நிமிடம் உங்கள் வாயை மூடி, மூக்கையும் அழுத்தி மூடிக்கொண்டால் உங்கள் உடல் மூச்சுக்காக ஏங்குகிறது. ஏனென்றால் உங்கள் உடலுக்கு வாழவேண்டுமென்று ஆசை. ஏதோவொரு குறிப்பிட்டநிலையில் மட்டும் இது இல்லை. எல்லா நிலையிலும் ஆசை இருக்கிறது. உடல்நிலையிலும் இருக்கிறது, பிரபஞ்ச நிலையிலும் இருக்கிறது. ஒவ்வொரு அணுவிலும் ஆசைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் நிறைவேறாத ஆசை உருவாக்கிய பாதிப்பால், மக்கள் ஆசையை விட்டுவிட வேண்டுமென்ற ஒரு ஆசையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆசையை விட்டுவிட்டால் நீங்கள் சாப்பிடவும் முடியாது, வாழவும் முடியாது, எதுவும் செய்யமுடியாது. உங்கள் ஆசை பெரிதாக இருந்தாலும், மிகச்சிறிதாக இருந்தாலும் அது நிறைவேறாமல் போகும்போது நேரும் பாதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

ஆசையென்பது அடிப்படையான சக்தி. ஆசையின் அடிப்படை, விரிவடையவேண்டும் என்பதுதான். தற்போது நீங்கள் எந்தநிலையில் இருந்தாலும் சரி, அதற்கும் மேல் இன்னும் சிறிது வளர வேண்டுமென்ற ஆசை எப்போதுமே இருக்கிறது. அந்த ஆசை நிறைவேறியவுடன் இன்னும் சிறிது வளரவேண்டும் என்கிற ஆசை வருகிறது. உங்களுக்குத் தெரிந்தவிதத்தில் மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும், விரிவடைய வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே இருக்கிறது. சிலருக்கு தங்களிடம் உள்ள பணத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை, சிலருக்கு தங்களிடம் உள்ள அதிகாரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை, சிலருக்கு இன்பங்களை அதிகரித்துக்கொள்ள ஆசை, சிலருக்கு அன்பு, சிலருக்கு அறிவு, இப்படி உங்களுக்கு எது தெரியுமோ அதில் விரிவடைய வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கிறது. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று இந்த விரிவடைதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முழுமை பெறுவதாகத் தெரியவில்லை. அப்படியானால், இந்த ஆசையின் அடிப்படைத் தன்மை எல்லையில்லாமல் போகவேண்டும் என்பதுதான். எல்லையில்லாத தன்மை இந்த உடலோடு அடையாளம் எடுத்தவுடன் ஆசை என்பது பிறந்துவிட்டது. இப்போது அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆசைதான் ஆன்மீகத்திற்கு அடிப்படை. ஆனால் தற்போது அது விழிப்புணர்வில்லாமல் வெளிப்பட்டிருக்கிறது. எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்கிற ஆசை, விழிப்புணர்வில்லாமல் இப்போது பொருள்தன்மையை நோக்கிப்போய்விட்டது. பொருள்தன்மையில் எல்லையில்லாமல் போக நிச்சயம் வாய்ப்பில்லை. பொருள்தன்மை என்பதே எல்லையோடு இருப்பதுதான். மனிதன் விரும்பாததும் இந்த எல்லையைத்தான். எவ்வளவுதான் எல்லையை அதிகரித்தாலும், இன்னும் விரிவடையவேண்டும், அந்த எல்லையை உடைத்துச் செல்லவேண்டுமென்ற ஆர்வம் எப்போதும் இருக்கிறது. இந்த எல்லை, பொருளாதார நிலையில் இருக்கலாம், மனநிலையில் இருக்கலாம், உடல்நிலையில் இருக்கலாம், உணர்வுநிலையில் இருக்கலாம். எப்படியென்றாலும் எல்லையை உடைத்து எல்லையற்ற நிலைக்குச் செல்லவேண்டுமென்ற ஆசை எப்போதும் இருக்கிறது. பொருள்தன்மையில் எல்லையற்ற நிலைக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை நிறைவேற வாய்ப்பில்லை. பொருள்தன்மையைத் தாண்டி வாழ்க்கையை உணரத் துவங்கும்போதுதான் அந்த ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் சென்னை நகரில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்து வீட்டில் வசிப்பவர் விலையுயர்ந்த கார் வைத்திருந்தால், உங்களுக்கு அதுபோன்ற இரண்டு கார்களை வைத்துக்கொள்ள ஆசை. நீங்கள் குக்கிராமத்தில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பக்கத்து வீட்டார் ஒரு நல்ல எருமை வைத்திருந்தால், உங்களுக்கு அதைப்போல 2 எருமைகள் வைத்துக்கொள்ள ஆசை. உங்கள் ஆசை சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறது. உங்களோடு அது சம்பந்தப்படவில்லை. ஆனால், ஆசை என்ற சக்தி விரிவடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் இந்த விரிவடைதல், விழிப்புணர்வுடன் நிகழாததால் பாதிப்பினை உருவாக்கியிருக்கிறது. இது விழிப்புணர்வாய் நிகழ ஒரு வழியினை ஏற்படுத்திக் கொடுத்தால் ஆசை பாதிப்பாய் இராது.

ஆசை இருப்பதால்தான் வாழவேண்டுமென்ற நோக்கம் இருக்கிறது. ஆசை இருப்பதால்தான் ஒரு மனிதனுக்குள் மலரவேண்டுமென்ற நோக்கம் வருகிறது. இல்லாவிட்டால் நம் வளர்ச்சியும், மலர்கிற தன்மையும், உயர்ந்த நிலைக்கு உயர வேண்டுமென்ற நோக்கமும் அழிந்துவிடும். நாம் ஏதாவது ஒரு விளையாட்டினை விளையாடக்கூட ஆசை தேவை. கால்பந்து விளையாட்டில் கால்பந்தினை அங்கிருக்கும் கோல் போஸ்டிற்குள் உதைத்துத் தள்ளவேண்டுமென்பதே விளையாட்டு. உங்கள் ஆசையும் அதை நோக்கித்தான். கொடுக்கப்பட்ட 90 நிமிடத்தில் அந்த ஆசையை நீங்கள் தீவிரப்படுத்தினால்தான் விளையாட்டு முழுமையாக நடக்கும். எனவே ஆசையை விழிப்புணர்வாக வைத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை, பாதிப்பும் இல்லை. உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விட எது பெரிதோ அதன்மீது ஆசை வைத்துக்கொள்ளுங்கள்.

  • ஈஷா

உலகில் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசையுண்டு. ஆசையில்லாத மனிதர்களைக் காண இயலாது. ஆசையில்லாதவன் மனிதனே அல்ல. அவன் மனிதனிலும் மேம்பட்டவன். இவ்வாசையினை, அவா, ஆவல், வேட்கை, விருப்பம், பற்று என்று கூறுவர். உலகில் பல ஆசைகள் உண்டு. மண், பொன், பொருள் உள்ளிட்ட என்னென்ன இருக்கிறதோ அத்தனையின்மீதும் மனிதன் ஆசைப்படுகின்றான்.

உலகில் உள்ள அத்தனைக்கும் ஆசைப்படு என்று சிலரும், ஆசைப்படாதே! அது துன்பத்தைத் தரும் என்று சிலரும் கூறுகின்றனர். ஆசைப்பட்டதால் தான் மனிதன் பண்பட்டு நாகரிகத்தில் சிறந்தவனாக, அறிவில் மேம்பட்டவனாகத் திகழ்கின்றான். ஆசையின்றி இருந்தால் இன்றுள்ளவை அனைத்தும் மனித சமுதாயத்திற்குக் கிட்டியிருக்காது என்று ஆசைப்படு என்று கூறுவோர் எடுத்துரைக்கின்றனர். பல்வேறுவிதமான துன்பங்களுக்கும் ஆசைதான் மூலகாரணம். அதனால் துன்பத்திற்கு வழிகாட்டும் ஆசையினை ஒழித்துவிட்டு மனிதர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் என்று கூறுவோர் கூறுகின்றனர். நமக்கும் இது சற்றே குழப்பத்தைத் தருகின்றது.

முனைவர் சி.சேதுராமன் கூறுவது:

சங்க இலக்கியங்களில் இருந்து இக்கால இலக்கிங்கள் வரை ஆசையைக் கைவிடுங்கள் என்றே கூறுகின்றன. “நில்லா உலகம்“ என்று கூறி உலகின் மீது ஆசைவைக்காதே என்றும், “ஈசனோடாவது ஆசையை அறுமின்கள்“(திருமந்திரம்) என்று இறைவன்மீது கூட ஆசை வைக்காதீர்கள் என இலக்கியங்கள் காலங்காலமாகக் காலத்திற்கேற்ற உவமைகளைக் கூறி ஆசையைக் கைவிடுமாறு வலியுறுத்துகின்றன.

வெஃகாமை, பற்று என்று ஆசையினை வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஒருவனுக்கு ஒன்றைப் பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விட்டால் அவன் எத்தகைய துன்பத்தையும் பாராது தான் ஆசைப்பட்டதை அடைய முயற்சி செய்வான். ஆசை வந்துவிட்டால் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் கூடத் தங்களது நிலையில்இருந்து இறங்கி வந்துவிடுகின்றனர். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் இத்தகைய பண்பினைக் காணலம்.

உலகத்தைப் படைத்தவர் பிரம்மா. அவர் ஒரு அழகு நிரம்பிய பெண்ணைப் படைக்கின்றார். அப்பெண்ணும் பிரம்மனால் உருவாக்கப்பட்டுத் தோன்றுகின்றாள். பெண் தோன்றி தன்னைப் படைத்த பிரம்மாவிற்கு வணக்கம் செலுத்துகிறாள். பிரம்மா பார்க்கின்றார். பார்த்தவுடன் தான் படைத்த படைப்பின் மீது அவருக்கு ஆசை தோன்றுகிறது. அவரால் ஆசையை அடக்க இயலவில்லை. அவளோ அவருக்கு மகள் முறை. இருப்பினும் பிரம்மாவின் ஆசை வெட்கமறியவில்லை. தான் படைத்தவளையே மனைவியாக்கிக் கொள்கின்றார்.

போரில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையால் தருமன் துரோணரைக் கொல்லத் தனது நேர்மையைக் கைவிட்டுப் பழிக்கு அஞ்சாது, வெட்கமின்றிப் பொய்கூறி துரோணர் சாவுக்குக் காரணமாகின்றான். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் இலக்கியங்களிலும், புராணங்களிலும் காணக்கிடைக்கின்றன.

ஆசை, மோகம் என்று இருசொற்கள் இன்று வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் ஒரே பொருள் குறித்தவையாயினும் இரண்டிற்கும் சிறிது வேறுபாடு உள்ளது. ஆசையை விருப்பம் என்றும், மோகம் என்பதை அதி ஆசை அல்லது அதிகமான விருப்பம் என்றும் கூறலாம். ஆசையும், அதி ஆசையும் மனிதனுக்கு ஏற்படக் கூடாது.

ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது இருவகையில் அடங்கும். ஒன்று உடல் அழகில் மயங்கி அப்பெண்ணை அடைய வேண்டும் என்று கருதுவது மற்றொன்று அவளது உடலழகைப் பாராது பண்பு, ஒழுக்கம், பேச்சு இவற்றைப் பார்த்து விரும்புவது. முன்னது விரைவில் மாயும். பின்னது நாளுக்கு நாள் வளரும். இராவணன் சீதையின் மேற் கொண்ட காதல் முன்னது. பின்னது நளன் தமயந்தியின் மேல் கொண்ட காதல்.

உடலிச்சை தீர்ந்தவுடன் முன்னது கசக்கும். பின்னது உடலிச்சை தீர்ந்தாலும் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆசையும், அதி ஆசையும் மனிதனுக்கு ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் மனித வாழ்க்கை இழிந்ததாகவும் அவமானத்தைத் தருவதாகவும் அமையும்.

சிலரது மனம் ஊசல் குண்டு போன்றது அலை பாய்ந்து கொணடே இருக்கும். இவாகள் உடனடியாக எதிலும் ஒரு முடிவினை எடுக்கமாட்டார்கள். அவர்களையே மதில் மேல் பூனை மனம் கொண்டவர்கள் என்பர். உப்பும், சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள் உடல்நலத்திற்குக் கேடு என்று அந்நோயுள்ள ஒருவரிடம் மருத்துவர் கூறினால் அவர் கேட்டு விடுவாரா? அவரால் விருப்பமான உணவைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க இயலுமா? முடியாது.

உப்பு அதிகமுள்ள உணவையும், இனிப்பு உள்ள உணவையும் உண்டால் உயிர்க்கு ஊறு விளையும் என்று தெரிந்தும் சிலர் ஆசையை அடக்க முடியாமல் தவிப்பார்கள். அவருக்கு உணவின் மீதும் ஆசை. உயிரின் மீதும் ஆசை. முடிவில் உணவின் மீதுள்ள ஆசை வென்றுவிட அதனை உண்டு துன்பத்திற்கு உள்ளாவர். இங்ஙனம் மனிதன் அலைபாயும் உள்ளத்துடன் இருத்தல் கூடாது. அதனைத் தவிர்க்க வேண்டும்.

மனிதனுக்குள்ள நியாயமான ஆசைகள் மறுக்க முடியாதவை எனலாம். அதாவது பிறருக்குத் தீங்கு விளைவிக்காத ஏற்படுத்தாத எவ்விதமான ஆசையும் நியாயமான ஆசை எனலாம். ஆனால் மாற்றார் வாழ்வில் தீயனவற்றையும், துன்பத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஆசையே பேராசை எனப்படும். இது அனைவருக்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். ஒருவன் தன்னிடம் இருப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். தனக்குக் கிடைக்காத ஒன்றின் மீது ஆசை வைத்து துன்பத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடாது. இருப்பதை வைத்துக் கொண்டு மனத்திருப்தியுடன் மனிதன் வாழ வேண்டும். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கை. அது என்றும் அமைதியைத் தரும். மேலும் மேலும் ஒருவன் ஆசைப்படுவது பேராசையாகும். அப்பேராசை பெரிய துன்பத்தையே நல்கும். மனிதன் இதனை உணர்ந்து வாழ வேண்டும்.

ஆசை என்பது அளவுடன் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் விரும்பினால்தான் இறைவனைக்கூட அனைவரும் வணங்குவர். இல்லையெனில் வணங்க மாட்டார்கள்.

ஆசை வாழ்நாள் முழுவது ஒருவருக்கு இருத்தல் கூடாது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் எதன்மீதும் மனிதன் ஆசை(பற்று) வைத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அது வாழ்வில் அமைதியின்மையையே உண்டாக்கும். ஆசையை எங்ஙனம் முற்றாக ஒழித்து உலகில் வாழ்வது? இதனை விளாம்பழத்துடன் நமது முன்னோர்கள் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். விளாங்காயாக இருக்கும்போது ஓடு காயுடன் ஒட்டியிருக்கும். பழம் பழுக்கப்பழுக்க ஒடும் பழமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது தனித்தனியே இருக்கும். இதனைப் போன்றே மனிதன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பழம் ஓட்டிற்குள் உள்ளது. அது ஓட்டுடன் ஒட்டுவதில்லை. அதுபோன்றே மனிதன் உலகத்திற்குள் இருந்தாலும் உலக ஆசைகளுக்கு ஆட்பட்டுவிடாது வாழ வேண்டும். அதுவே நிறைவான நிம்மதியான, அமைதியான வாழ்க்கையாகும்.

ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது. நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.
அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.
துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.
நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்போக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.
ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டுவந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதிகலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.”

நன்றி அல்லையூர்

ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன்னால் ஒழுக்கம் அவசியம். இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி கெட்டதை வளர்க்கும். வசதி குறைந்தவருக்கு உதவுவதுதான் தியாகம், தர்மம், புண்ணியம். அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மைவிட மேல் நிலையில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும். பொருளைத் திருடிப் பெறக்கூடாது. இன்னொருவனை வஞ்சித்துப் பெறக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது. இன்னொருவன் வயிற்றில் அடிக்கக்கூடாது. இல்லற சுகத்தத் தன் மனைவியிடம் அனுபவிக்கலாமாயினும், சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட நாட்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பிற பெண்களை மனதாலும் நினைக்கக்கூடாது. குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் சேரும். யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.
தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால் உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.
இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே மோட்சம்‘.
தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் புருஷனுக்கு கவுரவம்.

இவைகளைப் படித்தபின்னும் ஆசைகளை நீக்க முடியவில்லையெனில், அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி சென்று இறைவனிடம் வேண்டுங்கள்.