Tag Archives: குற்றாலம்

அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம்

அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்.

+91-4633-283 138, 210 138 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குற்றாலநாதர்
அம்மன் குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)
தல விருட்சம் குறும்பலா
தீர்த்தம் சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி
ஆகமம் மகுடாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திரிகூட மலை
ஊர் குற்றாலம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,”நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை அங்கிருந்தபடியே தரிசிக்கலாம்எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.

சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்கச் செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் இலிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார். தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன்,”அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்என யோசனை கூறுகிறார். முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், இரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது. அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, “திருமேனி குறுக குறுகஎன சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமணக் காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட இலிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.