Tag Archives: மாநெல்லூர்

அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் கோயில், மாநெல்லூர்

அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் கோயில், மாநெல்லூர், கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 44 – 2799 1508, 99656 51830 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்குச் செல்பவர்கள், முதலில் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

மூலவர் கல்யாண சுந்தர வீரபத்திரர்
அம்மன் பத்ரகாளி
தீர்த்தம் கிணற்று தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பரணியாலூர்
ஊர் மாநெல்லூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவன், நடராஜராக நடனமாடும் பஞ்சசபைகளில் இரத்னசபையாக விளங்குவது திருவாலங்காடு. இங்கு, சிவன், அம்பிகை இடையே நடனப்போட்டி நிகழ்ந்தபோது, சிவனின் நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அம்பிகை தோற்றாள். தோல்வியால் வெட்கப்பட்ட அவள், இத்தலம் வந்தாள். அப்போது சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி அம்பிகையை அழைத்து வரும்படி கூறினார். வீரபத்திரர், அம்பிகையை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் வீரபத்திரருக்கும், அம்பிகையின் அம்சமான பத்ரகாளிக்கும் கோயில் எழுப்பப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கிறார்கள். கோயிலுக்கு அதிகாலையில் வந்து, 9 விரலி மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு, 9 முறை பிரகார வலம் வருகின்றனர். சுற்றுக்கு ஒன்றாக பலிபீடத்தில் ஒரு மஞ்சளை வைக்கின்றனர். வலம் முடிந்ததும், 9 மஞ்சளையும் எடுத்து அம்பாள் பாதத்தில் வைக்கின்றனர். தட்சனின் யாகத்தை அழித்தபோது, பார்வதி தேவி உக்கிரமானாள். அந்நிலையில் அவள் பத்ரகாளிஎனப்பட்டாள். இவள் மேலும் எட்டு காளிகளை உருவாக்கி, நவகாளிகளாக இருந்து யாகத்தை அழிக்க வீரபத்திரருக்கு உதவினாள். இதன் அடிப்படையில் 9 மஞ்சள் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்த மஞ்சளில் நவ காளிகளும் எழுந்தருளுவதாக ஐதீகம். பின்பு சுவாமி சன்னதி எதிரில் படுத்து குட்டித்தூக்கம்போடுகின்றனர். தூக்கம் என்பது தன்னை மறந்த ஒரு நிலை. ஆழ்நிலை தியானத்தில் மூழ்குபவர்கள், தன்னை மறந்து விடுகிறார்கள். அதுபோல், தூக்கமும் ஒரு வகை சமாதிநிலை தியானமே. இறைவனிடம் முற்றிலுமாக சரணடைதல்என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. தன்னை நம்பி, தன்னிடம் சரணடைந்த பக்தர்களுக்கு வீரபத்திரர் குழந்தை பாக்கியத்தை விரைவாக அருளுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்யகின்றனர். இக்கோயிலை, “தூக்க கோயில்என்கிறார்கள்.