அருள்கு அரங்கநாதர் திருக்கோயில், பாலமலை

அருள்கு அரங்கநாதர் திருக்கோயில், பாலமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

ஊரின் நடுவில் உள்ள சமதளத்தில் கோயில் கட்டுவதே கடினம். பொருள் தேடி, ஆள் தேடி, அவர்களை ஒன்று திரட்டித் திருப்பணி செய்ய ஆண்டுகள் பலவாகும். இது இப்படியிருக்க, மலையுச்சியில் கோயில் கட்டுவது என்பது எத்துனை கடினம். ஆட்களை மலையுச்சிக்கு கொண்டு செல்லவேண்டும்; அவர்களுக்கு உணவு தயாரிக்கவேண்டும்; அதற்கு அரிசி முதலிய உணவுப் பண்டங்களை மேலேற்றவேண்டும்; அதற்கும் ஆட்படை வேண்டும்.

சரி. இவ்வளவையும் செய்து கோயில் கட்டியாகிற்று. தினசரி பூசை செய்ய தினம் பூசாரி மேலே போய்த் திரும்பி வரவேண்டும். இவ்வளவு உயரத்தில் ஆண்டவன் அமர்ந்திருக்கின்றானே! எப்படி மல ஏறுவது? என்று அங்கலாய்க்கும் இக்காலத்துப் பக்தர்களைப் போலன்றி மக்கள் எவ்வாறு மேலே சென்று இறைவனை வணங்கினார்கள். இவ்வாறெல்லம் எண்ணும்போது மலைப்பாக உள்ளது.

சித்தர்கள் தாங்கள் வணங்குவதற்காக மலைக்கு மேல் இறை வடிவங்களை பிரதிஷ்டை செய்தார்கள் என்று சித்தர் புராணங்கள் கூறுகின்றன. தவம் இருந்த முனிவர்களும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட சில அன்பர்களும் இத்தகைய பிரதிஷ்டைகளை வெவ்வேறு காலகட்டங்களில் செய்துள்ளார்கள்.

இத்தகைய கோயில்களில் ஒன்றுதான் பாலமலை ஸ்ரீஅரங்கநாதர் திருக்கோயில்.

கோவையில் இருந்து மேட்டுபாளையம் வழியாக ஊட்டிக்குச் செல்லும் சாலையில் வரும் ஊர், பெரியநாயக்கன்பாளையம். பெரியநாயக்கன்பாளையத்துக்கு நேர்மேற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மிதமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. ஆலயத்துக்கு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், அரங்கன் ஆலயத் திருவிழாக்களில் காட்டும் பங்கும் பக்தியும் பாராட்டிற்குறியது.

கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்த மலைவாசிகள், நகரத்துக்குத் தான் செல்லவேண்டும்.

யுகம் யுகமாக, எண்ணற்ற பக்தர்களுக்கும், மகான்களுக்கம், மன்னர்களுக்கம் அருள்பாலித்தவர் இந்த அரங்கன்.

கிருத யுகத்தில் நடந்த அந்த அற்புதம் கீழே:

கந்தர்வனான விஸ்வாவஸு என்பவரின் குமாரன் துர்தமன். ஒருமுறை இவன் தன் மனைவியருடன் ஒரு நதியில் ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்தான். அப்போது கயிலையில் பரமேஸ்வரரை தரிசித்து விட்டு தனது ஆசிரமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் வசிஷ்டர். மகரிஷியைக் கண்ட துர்தமனின் மனைவியர் அனைவரும் தத்தமது உடைகளை அணிந்து கொண்டு, மங்கலச் சின்னங்களைத் தரித்துக் கொண்டு, வசிஷ்டரின் ஆசிக்காக அவரது பாதம் பணிந்தனர். அவர்களை அன்போடு ஆசீர்வதித்தார். மகரிஷி ஆனால், துர்தமன் மட்டும் கரை ஏறாமல் வசிஷ்டரைக் கண்டும் காணாதது மாதிரி இருந்தான். அதோடு அவரை அலட்சியமும் செய்தான். கோபமான வசிஷ்டர் ஒருகுருவை அவமதித்த நீ குரூர குணம் கொண்ட அரக்கனாக ஆவாய் என்று சபித்தார்.

அவ்வளவுதான், அடுத்த கணமே அகோரத் தோற்றத்துடன் அரக்கனாக உருவெடுத்தான் துர்தமன். இது கண்டு துடித்த அவன் மனைவியர், “குருதேவா! எங்கள் கணவர் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். பழைய நிலையை அவர் அடைய அருள்புரியுங்கள்என்று வேண்டினர். வசிஷ்டர் மனம் இறங்கினார். “கவலைவேண்டாம். பகவான் நாராயணனை தினமும் பூஜித்துக் கொண்டிருங்கள். இன்னும் சில காலத்துக்குள் விஷ்ணுவின் அருளால் பழைய நிலையை அவன் அடைவான்என்று சொல்லி விட்டுச் சென்றார் வசிஷ்டர்.

காலம் உருண்டோடியது. விஷ்ணு பக்தரான காலவ மகரிஷி என்பவர் வனத்தில் கடுமையான தவத்தில் இருந்தார். பரந்தாமனின் திருநாமத்தை எந்நேரமும் ஜபித்து வந்தார். முனிவர்களுக்குத் தொல்லை தருவதுதான் அரக்கர்களது பணி. துர்தமனும் அதைத்தான் செய்தான். காலவரின் தவத்துக்கு அவ்வப்போது தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் சற்று அனுசரித்துப் போன காலவர், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பிரச்னையை தியானத்தின் மூலம் திருப்பிவிட்டார். அவ்வளவுதான் மனிதனின் துயர் துடைக்க வேண்டி சர்வ வல்லமை வாய்ந்த சக்ராயுதத்துடன் கிளம்பினார் ஸ்ரீமத் நாராயணன். துர்தமன் மீது சக்ராயுதத்தைப் பிரயோகித்தார். துர்தமன் சுயரூபம் பெற்றான். மகரிஷியான காலவருக்கும் கந்தர்வனான துர்தமனுக்கும் அங்கே காட்சி தந்தார் பரந்தாமன். ஸ்ரீமகாவிஷ்ணு, அன்று திருக்காட்சி தந்த அதே இடத்தில், அரங்கநாதன் என்கிற திருநாமத்துடன் இன்றளவும் பக்தர்களுக்குக் காட்சி தந்து வருகிறார். துர்தமனின் மேல் சக்கராயுதம் பட்ட இடம் சக்கர தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் அருகே இன்றும் விளங்குகிறது.

விஸ்வாமித்திர மகரிஷி மன்னராக இருந்து துறவி ஆனவர். அவர் மன்னராக இருந்தபோது குடிமக்களைக் காண, நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது விஜயம் செய்வதுண்டு. அப்படி ஒருமுறை புறப்பட்டார். வழியில் வனத்தில் வனப்புடன் ஓர் ஆசிரமம் அமைத்து பலருக்கும் உதவி வந்த வசிஷ்ட மகரிஷியை சந்தித்தார் மன்னர் விஸ்வாமித்திரர். மன்னருக்கும் அவருடன் வந்த வீரர்களுக்கும் அறுசுவ உணவு பரிமாறப்பட்டது.

காட்டிலே அமைந்துள்ள இந்த ஆசிரமத்தின் செழிப்பான நிலைமைக்கும், சுவையான உணவும் எங்கிருந்து கிட்டியது என வியந்தார் விசுவாமித்திரர். விசுவாமித்திரர் வசிஷ்டரை நோக்கி,”என் குடிமக்களின் நலம் வேண்டி இதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்என்றார். அதற்கு வசிஷ்டர்,”என்னிடம் இருக்கம் காமதேனு என்ற தேவ பசுவே எல்லாவற்றுக்கும் காரணம். அதன் மகிமையால்தான் இந்த ஆசிரமத்தில் எல்லாமே கிடைக்கின்றன. காமதேனு குடிகொண்ட இந்த ஆசிரமத்தை அண்டினோர் எவருக்கும் என்றென்றும் துன்பமில்லை. அனுதினமும் அறுசுவை உணவுக்கு பஞ்சமில்லைஎன்றார்.

விஸ்வாமித்திரர் வியந்தார். மன்னன் என்ற முறையில் பெருமைப்பட்டார். மனிதன் என்ற வகையில் பொறாமைப்பட்டார். வசிஷ்டரை நோக்கி விசுவாமித்திரர்,”மகரிஷியே! காமதேனு தங்களிடம் இருப்பதை விட ஒரு மன்னரான என்னிடம் இருந்தால் நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படும். காமதேனுவை எனக்குத் தாருங்கள்என்றார்.

வசிஷ்ட மகரிஷி,”மன்னா! காமதேனுவின் இருப்பிடம் இதுதான். அவள் வேறெங்கும் வர விரும்பமாட்டாள். அவள் விரும்பினால் தாராளமாக அழைத்துச் செல்லலாம் எனக்கு மறுப்பு இல்லைஎன்றார். விசுவாமித்திரர், தன்னுடன் வருமாறு அழைத்தபோது காமதேனு மறுத்துவிட்டது. கோபப்பட்ட விஸ்வாமித்திரர் பலாத்காரப்படுத்தியும் பார்த்தார். பணியவில்லை காமதேனு. வசிஷ்டர் தன்னை அவமதித்ததாகக் கருதி அவரை வீழ்த்தும் நோக்கத்தில், விசுவாமித்திரர் அஸ்திரங்களை பிரயோகம் செய்தார். ஆனால் இவை அனைத்தும் வசிஷ்டரின் பாதம் பணிந்து வீழ்ந்தன.

விஸ்வாமித்திரருக்குத் தெளிவு பிறந்தது. அனைத்து அதிகாரங்களும் பெற்று ஒர மன்னரால் முடியாத விஷயங்களும் மண்ணுலகில் இருக்கின்றன என்பதை உணர்ந்தார். ராஜ்யத்தை மறந்தார். மணிமுடி துறந்தார். நாட்டை விடுத்துக் காட்டை அடைந்தார். தவம் புரியத் தொடங்கினார். ஆயிரம் வருட காலம் அருந்தவம் புரிந்தார். வழக்கம்போல், இவரது தவத்தால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என்று அஞ்சிய தேவர்கள், தேவலோக அழகியான ரம்பையை அனுப்பினார். தேவர்களது திட்டம் செல்லுபடி ஆகவில்லை. தன்னை சபலப்பட வைப்பதற்காக, முயற்சித்த ரம்பையைக் கல் ஆகும்படி சபித்தார் விஸ்வாமித்திரர்.

காலம் உருண்டோடியது. கல்லாக மாறிய ரம்பை அகத்திய முனிவரின் சிஷ்யரான ஸ்வேத மகரிஷியின் ஆசிரமத்தின் வாயிலில் பல வருடங்களாகத் தவம் இருந்தாள்.

ஒரு தவசீலரின் சாபத்தால் கிருதாசி எனும் தேவகன்னிகை அரக்கியாக மாறினாள். அவள்,

ஸ்வேத மகரிஷியின் தவத்துக்கு தொல்லை தந்து வந்தாள். ஒரு நாள் ஸ்வேதமகரிஷியின் ஆசிரமம் வந்து தொல்லை செய்த அரக்கியை நோக்கி அருகில் இருந்த கல்லை (சாபத்தால் கல்லாக மாறிய ரம்பை) எடுத்து மந்திரங்களை உச்சரித்து வீசினார் ஸ்வேத மகரிஷி.

அந்த கல் அரக்கியை இழுத்துக் கொண்டு போய் பத்ம தீர்த்தத்தில் தள்ளியது. தீர்த்தத்தின் ஸ்பரிசத்தால் கல் ரம்பையானது. அரக்கி கிருதாசி ஆனாள். இருவரும் சாபவிமோசனம் பெற்று சுயரூபம் அடைந்தனர்.

அனைவரும் போற்றும் பாலமலையில் பரந்தாமனின் சந்நிதியில் உள்ளார் பகவான் நாராயணர். பாஞ்சராத்திர ஆகமம், தென்கலை சம்பிரதாயம் கடைப்பிடிக்கப் படுகிறது. கவுடர் எனப்படும் பிரிவைச் சேர்ந்த மக்களால் சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவர்களே இந்த ஆலயத்தைச் சீரமைத்த பெருமக்கள்.

பரந்தாமனின் அருளால் ஒவ்வொரு முறையும் அவனது திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள். கோயிலை சீரமைக்கும் பொருட்டு சில மண்டபங்களையும் மதிலையும் கட்டுவதற்குக் கருங்கற்கள் இல்லாதது குறித்து வருந்திய அடியார்கள், இறைவனிடம் பக்தியோடு வேண்டினர். அன்றைய தினம் இரவு ஏதோ பெரிய வெடிச் சத்தம். மறுநாள் காலை அடியார்கள் அங்கே சென்று பார்த்தபோது புதிதாக அமைக்க இருந்த கட்டடத்துக்கு வேண்டிய கற்கள் அங்கே கிடைத்ததாகவும், பரந்தாமனின் கருணையால் இது நிகழ்வதாக சொல்கிறார்கள்.

சென்றதும், நேராக ஸ்ரீ அரங்கநாதனின் அற்புத தரிசனம். வெளியே துவாரபாலகர்கள். கருவறையில் கீழே சிலா வடிவத்தில் யுகமாக இருந்து அருள் பாலிப்பவர். கடந்த 2002 ஆம் ஆண்டுக்குப்பின் சுயம்பு வடிவத்துக்குப் பின்னால் பஞ்சலோகத்தால் ஆன ஸ்ரீ அரங்கநாதரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த அரங்கர், நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். சுமார் 265 கிலோ எடை கொண்ட இந்த விக்கிரகம் நாலேகால் அடி. உயரம் கொண்டது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள். தேர்த் திருவிழா மற்றும் புறப்பாடு காலங்களில் உற்சவரை அலங்கரித்து விழா நடத்துகிறார்கள். ஸ்ரீ அரங்கநாதரின் கருவறைக்கு வெளியே இரு பக்கமும் செங்கோதையம்மன் மற்றும் பூங்கோதையம்மன் சந்நிதிகள். அதாவது தாயார் சந்நிதிகள்.

விசாலமான வெளிப் பிராகாரம். மற்றபடி தும்பிக்கை ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்கள், தன்வந்திரி. காளிதாஸ் ஸ்வாமிகள், ஸ்ரீராமானுஜர், சுதர்சனர் நரசிம்மர் ஆகியோருக்கு சந்நிதிகள் அழகாக அமைந்துள்ளன. பிரகாரத்தில் ஆதிசேஷன், கருடன், யானை, குதிரை, ஆஞ்சநேயர் போன்ற வாகனங்கள் காணப்படுகின்றன.

சித்திரை மாதம் 10 நாள் திருவிழா. புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகள். வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜயந்தி மற்றும் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்கள் இங்கு சிறப்பு. தவிர, ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் வருகிறார்கள். தென் திருப்பதி என்று சொல்லப்படும் இந்த ஷேத்திரத்தில் மலை மேல் குடி கொண்ட அந்த மாதவனை தரிசிக்கலாம்.

One Response to அருள்கு அரங்கநாதர் திருக்கோயில், பாலமலை

  1. பலமுறை சென்றிருக்கும் அற்புதமான பாலமலை அரங்கனைப்பற்றிய பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *