அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி, கண்டியூர் போஸ்ட், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-93451 04187, +91-4362-262 334, 93451 04187, 98429 78302 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
அம்மன் மங்கையர்க்கரசி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வைத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேதிகுடி
ஊர் திருவேதிகுடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களைப் புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடிஎன்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு வேதிஎன்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.

சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனைத் தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியைத் தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான். பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், “உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியேஎன்று பாடியுள்ளார்.

சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. கிழக்கு நோக்கிய கோயில். சாலையோரத்திலேயே உள்ளது. கோயிலுள் நுழையும் முன்னரே அம்பாள் சன்னிதி தனியாக வெளியே உள்ளது. அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. நின்ற கோலம்.

உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் வருகிறது. மண்டபத்தில் வினாயகர் நான்கு வேதங்களையும் கேட்கும் நிலையில் இடக்காலை உயர்த்தி ஒருக்களித்து நின்று செவிசாய்த்து அற்புதமாக காட்சியளிக்கிறார். நேரே தெரிவது மூலவர். வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார் இத்தலத்தில் தலை சாய்த்து அருள்பாலிக்கிறார். எனவே இவர் வேத பிள்ளையார்எனப்படுகிறார். நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதிமங்கலம்என்ற பெயரும் இருந்துள்ளது.

வாளை என்னும் மீன்கள் நிறைந்த தடாகத்தில் கரையில் அமைந்ததால் இவருக்கு வாளைமடுநாதர்என்றும் பெயருண்டு. இவர் வேதங்களுக்கு அதிபதி என்பதால், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்குமுன் பெற்றோர் இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். சரஸ்வதி பூஜையன்றும் சிவனுக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் சுவாமி மீது சூரிய ஒளி விழும். கோயில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது. திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும்போது, ஐயாறப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி, இத்தல மூர்த்தியை அழைத்துச் செல்வர். இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து, அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்துத் தருபவதால் மங்கையற்கரசிஎன்றே பெயர். ஆடி, தை மாத வெள்ளியன்று இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.
செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர் இருக்கிறார். அருகில் ஆஞ்சநேயர் வணங்கியபடி கிரீடம் இல்லாமல் இருக்கிறார். சிவன் சன்னதியைச் சுற்றிலும் 108 லிங்கங்கள் உள்ளன.

தேவாரப்பதிகம்:

வருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப்படையுடைய திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய அருத்தனை ஆரா அழுதினை நாமடைந் தாடுதுமே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 14வது தலம்.

 

திருவிழா:

திருவையாறு ஐயாரப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழு சிவத்தலங்களுள் இத்தலம் நான்காவதாகும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி.

பிரார்த்தனை:

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் கண்டியூர் வந்து அங்கிருந்து அய்யம்பேட்டை நெடார் செல்லும் சாலையில் 1 கீ மீ பயணித்தால் வரும் தலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *